கேரள மாநிலம், திருவனந்தபுரம் வர்க்கலாவைச் சேர்ந்தவர் பிரதாபன். வர்க்கலா புத்தன் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு ஷெர்லி என்ற மனைவியும், நிகில், அகில் என இரண்டு மகன்களும் இருந்தனர். நிகிலுக்கு அபிராமி என்ற மனைவியும், பிறந்து எட்டு மாதங்களே ஆன ரேயான் என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் பிரதாபனின் வீட்டில் நள்ளிரவு சுமார் 1:15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அதிகாலை 2 மணியளவில் அங்கு சென்று தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், "பிரதாபனின் வீட்டில் தீப்பிடித்தது குறித்து 2 மணியளவில் அப்பகுதியினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அனைவரும் வெவ்வேறு அறையில் தூங்கியுள்ள நிலையில் நிகில் என்பவரைப் படுகாயங்களுடன் மீட்டுள்ளோம். அவர் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு பைக்குகள் எரிந்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் பார்க்கிங் பகுதியிலிருந்து தீப்பிடித்திருக்கலாம் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஹாலிலிருந்து தீ பிடித்திருக்கலாம் எனவும் சந்தேகம் உள்ளது. இரண்டு ஹால்களும் முழுமையாக எரிந்துள்ளன. ஆனால் வீட்டின் அனைத்து அறைகளிலும் புகை மூட்டம் உள்ளது.

இறந்தவர்கள் அனைவரும் புகையை சுவாசித்ததால் இறந்திருப்பதாக முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது. 2 மாடி வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே புகை வெளியேற வாய்பு இல்லாததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம். சிசிடிவி-யை ஆய்வு செய்தபோது இரவு 1:15 மணி அளவில் தீப்பிடித்ததாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு மாதக் குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்த சம்பவம் கேரளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.