Published:Updated:

அதிவேகமாக வந்த கார்; தூக்கி வீசப்பட்ட பத்திரிகையாளர்! - சிறையிலடைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி

சத்யா கோபாலன்

விபத்தில் உயிரிழந்த பஷீரின் இறுதிச் சடங்குகள் நேற்று இரவு அவரது சொந்த ஊரான கோழிக்கோட்டில் நடைபெற்றது.

பஷீர் -ஸ்ரீராம்
பஷீர் -ஸ்ரீராம் ( OnManorama )

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரையைச் சேர்ந்தவர் கே.எம் பஷீர். இவர் சிராஜ் என்ற மலையாள நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார் பஷீருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது பஷீர் தன் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்.

விபத்து
விபத்து
Twitter/@mdnisaruddin

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் பஷீர் தன் வேலைகளை முடித்துவிட்டு அருங்காட்சியக சாலை (Museum Road ) வழியாக தன் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிரில் அதிக வேகத்தில் வந்த ஒரு சொகுசு கார் இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பஷீரின் வாகனம் தூக்கிவிவீசப்பட்டு அருகிலிருந்த சுவரில் பலமாக மோதியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திலேயே பஷீர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இருசக்கர வாகனம் சுவரில் நின்றபடி காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. இதற்கிடையில், நடந்த விசாரணையில் சொகுசு காரில் வந்தவர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எனத் தெரியவந்துள்ளது. ஸ்ரீராம் ஒரு மருத்துவர். வெளிநாட்டில் படித்த அவர் சமீபத்தில் இந்தியா வந்து ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது அவர் கேரள சர்வே துறை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

பஷீரின் வாகனம்
பஷீரின் வாகனம்

``ஸ்ரீராம் தன் சொகுசு காரில் அதிவேகமாக வந்தார். இரு சக்கர வாகனத்தை இடித்த பிறகு காரில் இருந்து இறங்கிய ஸ்ரீராம் குடிபோதையிலிருந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இருந்தார்” எனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து ஸ்ரீராமை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் தான் காரை ஓட்டவில்லை எனக் கூறிய அவர் பிறகே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு மது அருந்தியதற்கான ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஸ்ரீராம் தான் காரை ஓட்டிவந்தார் என உறுதியான பிறகு 9 மணி நேரம் கழித்தே அவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதாகக் கேரள ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், ஸ்ரீராமுடன் இருந்த அந்தப் பெண், மாடல் அழகி என்றும் விபத்தில் ஒருவர் உயிரிழந்த பிறகு அந்தப் பெண்ணை வேறொரு காரில் காவலர்கள் அனுப்பிவைத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஷீர்
பஷீர்
OnManorama

சமூகப் பணிகள் செய்ய வேண்டிய ஒரு ஐ.ஏஸ் அதிகாரியே குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் கேரள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஷீரின் மரணத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் இறப்புக்குக் காரணமானவர்களுக்குத் தக்க தண்டனை தரப்படும் எனவும் கூறியுள்ளனர்.