Published:Updated:

கொக்கையாறு நிலச்சரிவு: கட்டியணைத்தவாறே புதையுண்ட பிஞ்சுகள்! - கண்ணீரில் கரைகிறது கடவுளின் தேசம்

நிலச்சரிவு - மீட்புப் பணி
News
நிலச்சரிவு - மீட்புப் பணி

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் மழையின் அளவு அதிகமாக இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டபோதிலும் கூட்டிக்கல், கொக்கையாறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில்தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.

கேரள மாநிலம், பீர்மேடு தாலுகாவில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியான கொக்கையாற்றில் காபி, வாழை உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலித் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். மலைமேடுகளில் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த சேமிப்பைக்கொண்டு சிறிய அளவிலான வீடுகளை கட்டிக்கொண்டு வாழ்ந்துவந்தனர்.

வழக்கம்போல அன்றைய விடியலும் கொக்கையாறு பகுதி மக்களுக்கு தாமதமாக இருந்தது. வழக்கத்தைவிட கூடுதல் மழை என்பதால் விவசாயப் பணிகளுக்கு யாரும் வெளியே செல்லவில்லை. அவரவர் வீடுகளில் முடங்கிக்கிடந்தனர். தாங்களும் நிலச்சரிவில் சிக்கி மடிவோம் என அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். எனவே தாழ்வான பகுதிகளை நோக்கி ஓடும் வெள்ளைத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

விடியோ
விடியோ

அப்போது தொடர்மழையால் மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்து பிடிமானத்தை இழந்துகொண்டிருந்தது. அக்டோபர் 16 காலை 10:30 மணியளவில் குழந்தைகள் ஒரு வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களை அவர்களுடைய அம்மா வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போதும் அவர்கள் நிகழவிருக்கும் கோரத்தை அறிந்திருக்கவில்லை. அந்தக் கணம் திடீரென நிலம் சரிந்து வீட்டையே விழுங்கிக்கொண்டது. அதில் சிக்கிய குழந்தைகளோ அப்போதும் கட்டியணைந்தவாறே இறந்திருப்பது மீட்புப்பணியின்போது தெரியவந்தது.

அந்தக் காட்சியை கண்ட மீட்புப்பணியினர் மட்டுமல்ல, கடவுளின் தேசமான கேரளமே கண்ணீர் சிந்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிலச்சரிவு
நிலச்சரிவு

அன்று உயிரிழந்தவர்களில் ஆன்சி என்பவரைத் தவிர மற்றவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பைஷலின் என்பவரின் குழந்தைகளான அப்ஷால், அபியான், பைஷலின் சகோதரி பவுசியாவின் குழந்தைகள் அமீன்ஷியாத், அம்னா ஆகியோர் எப்போதும் ஒன்றாகவே விளையாடுவர்களாம்.

கொக்கையாரற்றில் கனமழை பெய்தபோது வீட்டின் வழியாக ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளத்தை பவுசியா தனது செல்போனில் விடியோ எடுத்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவை தனது நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்திருக்கிறார்.

அந்த நேரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அவர்கள் இறந்துள்ளனர். நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட விடியோவில் அமீன்ஷியாத், அம்னா ஆகியோர் பயத்தில் நடுங்கியவாறு இருந்துள்ளனர்.

எப்போதும் ஒன்றாகவே விளையாடிக்கொண்டிருந்த அப்ஷால், அபியான், அம்னா ஆகியோர் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தவாறு இறந்திருப்பதைக் கண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் கலங்கியுள்ளனர்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

மூணாறு பகுதி சமூக ஆர்வலர்களைக்கொண்ட அவசரகால மீட்புக்குழுவைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் விசாரித்தோம். ``கடந்த ஆண்டு மூணாறு ராஜமலை பெட்டிமுடியில் நிலச்சரிவு ஏற்பட்டு 70 பேர் உயிரிந்தனர். அப்போது அட்வெஞ்சர் ஆக்டிவிட்டீஸில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டோம். ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புக்குழு இருப்பினும், இந்தப் பகுதியை நன்கு அறிந்தவர்களால் எளிதில் மீட்புப்பணியை செய்ய முடிந்தது. இதையடுத்துதான் மூணாறு ஊராட்சியில் அவசரகால மீட்புக்குழு உருவாக்கப்பட்டது. நாங்கள் மீட்புப்பணியில் ஈடுபடும்போது பெரிதும் சங்கடப்படுவது குழந்தைகளின் சடலங்களை எடுக்கும்போதுதான். அந்தப் பிஞ்சு முகங்களைப் பார்க்கக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டது உண்டு. ஆனாலும் அவ்வாறான சூழல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ஒன்றுகூடிய உறவினர்கள், நண்பர்கள் மொத்தமாக நிலத்தில் புதைந்தனர். அதுபோல விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் கட்டியணைத்தவாறு இறந்துகிடந்தது எங்களைக் கண்கலங்க வைத்துவிட்டது. இது தொடரக் கூடாது என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.