Published:Updated:

"நண்பனின் உயிரைக் காக்க பிச்சைகூட எடுப்போம்!" - குளித்தலை இளைஞர்களின் நெகிழ்ச்சிக் கதை!

கோமா நிலையில் கோபிநாத்
கோமா நிலையில் கோபிநாத் ( நா.ராஜமுருகன் )

"மத்தவங்களுக்கு உதவுறதுல அவ்வளவு ஆர்வமா இருப்பான் கோபிநாத். ஆனா, இன்னைக்கு அவன் உசுரைக் காப்பாத்த மத்தவங்ககிட்ட உதவி கேட்கிற நிலைமை. எங்க உசுரைக் கொடுத்தாவது, எங்க நண்பனைக் காப்பாத்திடுவோம்!"

சொந்தபந்தங்களுக்கு உடல் நலமில்லை என்றாலே, அவர்களைக் கண்டும் காணாமல் தவிர்த்துவிடும் சுயநலம் மிக்க மனிதர்கள் மலிந்துவிட்ட காலமிது. ஆனால், வேலைபார்த்த இடத்தில் விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜில் இருக்கும் நண்பனைக் காப்பாற்றுவதற்காக, பஸ் ஸ்டாண்டு, கல்வி நிலையங்கள், சமூக வலைதளங்கள் எனப் பல வழிகளில் நிதி திரட்டிக் கொடுத்து, அந்த இளைஞரின் குடும்பத்தினரை நெகிழ வைத்திருக்கிறார்கள், குளித்தலைப் பகுதி இளைஞர்கள்.

கோபிநாத்
கோபிநாத்
நா.ராஜமுருகன்
``மனைவி, மகளுக்கு மனநலப் பாதிப்பு... 2 தம்பிகள் மாற்றுத் திறனாளி!" - `தாயுமானவர்' பிச்சை

கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்தவர்கள், கோவிந்தராஜ்- கிருஷ்ணவேணி தம்பதியினர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, பிரவீண் மற்றும் கோபிநாத் என இரண்டு மகன்கள். கோபிநாத், ஓசூர் தனியார் கம்பெனி ஒன்றில் டிசைன் இன்ஜினீயராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், கடந்த மாதம் 10-ம் தேதி, கம்பெனி மாடியிலிருந்து தவறி விழுந்து விபத்தில் சிக்கினார் கோபிநாத். தகவல் தெரிந்து, பதறியடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் குடும்பத்தினர். சுயநினைவு இல்லாமல் இருந்த கோபிநாத், அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

குளித்தலை எம்.எல்.ஏ ராமர் உதவி
குளித்தலை எம்.எல்.ஏ ராமர் உதவி
நா.ராஜமுருகன்

அங்கிருந்த மருத்துவர்கள், 'தலையில் பலமாக அடிபட்டிருக்கு. அவரைக் காப்பாற்றும் அளவுக்கு இங்கு வசதியில்லை' என்று கைவிரித்திருக்கிறார்கள். இதனால் பதறிப்போன குடும்பத்தினர், கோபிநாத்தை பெங்களூர் கொண்டுபோய், அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 'மேஜரா ஒரு ஆபரேஷன் பண்ணணும். பணம் நிறைய செலவாகும்' என்று அங்குள்ள மருத்துவர்கள் சொல்ல, திகைத்து நின்றிருக்கிறார் தந்தை கோவிந்தராஜ்.

இருந்தாலும், 'மகனைக் காப்பாற்ற வேண்டுமே' என்ற பதைபதைப்பில், தனது மூத்த மகன் பிரவீணை ஊருக்கு அனுப்பி கடனாகக் கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார். மருத்துவர்கள், பல மணிநேரம் போராடி கோபிநாத்தின் உயிரைக் காப்பாற்றினார்கள். ஆனால், கோபிநாத்துக்கு சுயநினைவு வரவில்லை. மருத்துவமனை ஐசியூ-வில் கோபிநாத்தை வைத்திருக்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை செலவாகியிருக்கிறது.

அய்யர்மலை அரசுக் கல்லூரி மாணவர்களின் உதவிகேட்கும் இளைஞர்கள்
அய்யர்மலை அரசுக் கல்லூரி மாணவர்களின் உதவிகேட்கும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்
எங்க ஊரைச் சேர்ந்த சுந்தர், முத்துச்செல்வன், கடம்பை பிரபு, ஜீவபாரதி, கணேஷ், மது என கோபிநாத்தின் நண்பர்கள் பல்வேறு வழிகளில் இரண்டு லட்சம் வரை நிதி திரட்டிக் கொடுத்தாங்க. இன்னமும் திரட்டிக்கிட்டு இருக்காங்க. என் தம்பிக்கு இப்படி ஆனதும், சொந்தக்காரங்க சிலர்கூட கண்டுக்கலை. ஆனா, நண்பர்களான இவங்க, என் தம்பியைக் காப்பாத்த கடுமையாகப் போராடி நிதி திரட்டித் தந்திருக்காங்க. அவங்களை நாங்க ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்.
பிரவீண்

தொடர்ந்து நடந்தவற்றை பற்றி, கோபிநாத்தின் அண்ணன் பிரவீண் கண்ணீரோடு விவரித்தார்.

"8 நாள் வரை தம்பியை அங்க வச்சிருந்தோம். ஆபரேஷன் எல்லாத்துக்கும் சேர்த்து 9 லட்சம் வரை செலவாயிடுச்சு. வட்டிக்கு கடன்வாங்கித்தான் சமாளிச்சோம். அங்க மேற்கொண்டு சிகிச்சையைத் தொடர எங்களுக்கு பண வசதி இல்லை. அதனால், மதுரையில் உள்ள பிரபல மருத்துவனையில் பேசினோம். அவங்க கோபிநாத்துக்கு நினைவு திரும்பறவரைக்கும் அங்குள்ள ஐசியூ-வில் வைத்து சிகிச்சையளிக்க தினமும் 24,000 ஆகும்னு சொன்னாங்க.

பிரவீண் (கோபிநாத்தின் சகோதரர்)
பிரவீண் (கோபிநாத்தின் சகோதரர்)
நா.ராஜமுருகன்

அதனால், மதுரைக்குக் கொண்டுவந்துட்டோம். கடந்த இருபது நாளுக்கு மேலாக அங்கதான் கோபிநாத் கோமா ஸ்டேஜுல இருக்கிறான். இந்தக் கோமாவால் உயிருக்குப் பிரச்னை இல்லை'னு மருத்துவர்கள் சொன்னாங்க. ஆனா, 'கோபிநாத்துக்கு நினைவு திரும்ப குறைஞ்சது மூணு மாசம் ஆவும். அதுவரை ஐசியூ-வுலதான் இருக்கணும்'னு சொல்லிட்டாங்க.

தினமும் 24,000 பீஸ் கட்ட பணம் திரட்டுறதுக்குள்ள அவ்வளவு போராட வேண்டி இருக்கு. ஆனா, என் தம்பி நல்லாவனுமேன்னுதான் போராடுறோம். வாரத்துக்கு ஒருதடவை அவன் கண்ணுல இருந்து தண்ணி வருது. கேட்டா, 'லேசா நினைவு வந்து அழுவுறான்'னு மருத்துவர்கள் சொல்றாங்க. அதனால், அவனை நல்லாக்கி எழுந்து உட்கார வைக்கணும்னு யுகப் போராட்டம் நடத்துறோம்.

தனியார் பள்ளி மாணவர்கள் உதவி
தனியார் பள்ளி மாணவர்கள் உதவி
நா.ராஜமுருகன்
`அந்த விபத்து ஏற்படுத்திய தாக்கம்தான் காரணம்!' - இலவச ஆம்புலன்ஸ் சேவையில் கேரள பேக்கரி ஓனர்

எங்க ஊரைச் சேர்ந்த சுந்தர், முத்துச்செல்வன், கடம்பை பிரபு, ஜீவபாரதி, கணேஷ், மதுனு கோபிநாத்தோட நண்பர்கள் பல்வேறு வழிகளில் இரண்டு லட்சம் வரை நிதி திரட்டிக் கொடுத்தாங்க. இன்னமும் திரட்டிக்கிட்டு இருக்காங்க. என் தம்பிக்கு இப்படி ஆனதும், சொந்தக்காரங்க சிலர்கூட கண்டுக்கலை. ஆனா, நண்பர்களான இவங்க, என் தம்பியைக் காப்பாத்த கடுமையா போராடி நிதி திரட்டித் தந்திருக்காங்க. அவங்களை நாங்க ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்" நெக்குருகிப் பேசுகிறார்.

கோபிநாத் நலம்பெறவேண்டி நிதி திரட்டிய நண்பர்களில் ஒருவரான முத்துச்செல்வனிடம் பேசினோம்.

"நண்பர் கோபிநாத்துக்கு இப்படி ஆனதும், எங்களுக்கு அதிர்ச்சியாயிடுச்சு. நண்பரின் குடும்பச் சூழலுக்கு இவ்வளவு செலவு பண்றதே பெரிசு. இதுக்கு மேலயும் அவங்களால செலவு பண்ண வழியில்லை. அதனால், நண்பரின் சிகிச்சைக்காக நிதிவசூல் பண்ண முடிவு பண்ணினோம். சமூக வலைதளங்களில் கோபிநாத்தைப் பத்தி பதிவுபோட்டோம். முதல்ல யாரும் நம்பலை. அப்புறம் அவனோட சிகிச்சை சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சேர்த்ததும், அதன்பிறகு நம்பிக்கை வந்து பலரும் உதவுனாங்க. அப்படி சமூக வலைதளங்கள் மூலமா ஒருலட்சம் திரட்டினோம். மேற்கொண்டு, குளித்தலைப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகள், குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ ராமர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள்னு பலரையும் சந்திச்சு உதவி கேட்டோம். அதன் மூலமா ஒரு லட்சம் கிடைச்சுச்சு.

முத்துச்செல்வன்
முத்துச்செல்வன்
நா.ராஜமுருகன்

இங்குள்ள தனியார் பள்ளியில் 10,000 கலெக்ட் பண்ணி கொடுத்தாங்க. அதுல ஒரு மாணவன், தனது சேமிப்புப் பணம் 2,000 ரூபாயைக் கொடுத்தார். அய்யர் மலை அரசுக் கல்லூரி மாணவர்கள் 12,000 திரட்டித் தந்தாங்க. மொத்தமா கலெக்டான இரண்டு லட்சத்தையும் கோபிநாத்தோட அண்ணன் பிரவீண்கிட்ட கொடுத்துட்டோம். மேற்கொண்டு நிதி திரட்டிக்கிட்டு இருக்கோம். எங்க நண்பரைக் காப்பாத்த நாங்க பிச்சைகூட எடுக்கத் தயார். கோபிநாத்துக்கு அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வாங்கலையாம். அதை வாங்கவும் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம். மத்தவங்களுக்கு உதவுறதுல அவ்வளவு ஆர்வமா இருப்பான் கோபிநாத். ஆனா, இன்னைக்கு அவன் உசுரைக் காப்பாத்த மத்தவங்ககிட்ட உதவி கேட்கிற நிலைமை. எங்க உசுரைக் கொடுத்தாவது, எங்க நண்பனைக் காப்பாத்திடுவோம்" என்றார், உணர்ச்சி மேலிட.

பரிசுத்தமான நட்பின் வேண்டுதல், கோபிநாத்தை நிச்சயம் எழுந்து உட்காரவைக்கும்!

அடுத்த கட்டுரைக்கு