Published:Updated:

டிக்கெட் கேட்ட கண்டக்டர்; பர்சில் பணம் எடுத்த பெண்!- 30 அடி தூக்கி வீசப்பட்ட பயணி #ShockingVideo

அதிவேகமாகச் சென்ற அரசு பஸ்சில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுந்தார்.

வைரலாகும் வீடியோ
வைரலாகும் வீடியோ

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை பஞ்சாயத்து அன்னை சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோகிலா. இவர் நேற்று காலை பெருந்துறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதற்காக குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து இருந்தார். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் கோகிலா ஏறினார். பின்னர், அந்த பஸ் குமாரபாளையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்டை மேடு பைபாஸ் ரோட்டில் சென்றுகொண்டு இருந்தது.

government bus
government bus

அந்த இடத்தில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், பஸ் சர்வீஸ் ரோடு வழியாக இறங்கிச் சென்றது. அப்போது ஒரு திருப்பத்தில் பஸ் வேகமாகத் திரும்பியபோது பஸ்சின் படிக்கட்டு வழியாக கோகிலா கீழே விழுந்தார். 30 அடி தூரத்துக்கு வெளியே அவர் வீசப்பட்டார். இதில் அவருக்குத் தலை, முன்னங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

`அந்த விபத்து ஏற்படுத்திய தாக்கம்தான் காரணம்!' - இலவச ஆம்புலன்ஸ் சேவையில் கேரள பேக்கரி ஓனர்

இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பஸ்சின் படிக்கட்டு அருகே நின்றபடி கோகிலா பயணம் செய்தபோது, கண்டக்டர் டிக்கெட் கொடுக்க வந்துள்ளார். அப்போது கோகிலா தனது பர்சில் இருந்து பணத்தை எடுத்து டிக்கெட் வாங்க கண்டக்டரிடம் கொடுத்த, அதே சமயத்தில் பஸ் வளைவில் வேகமாகத் திரும்பியுள்ளது. அப்போது எந்தவித பிடிமானமும் இல்லாமல் நின்றுகொண்டிருந்த கோகிலா பஸ்சிலிருந்து படிக்கட்டு வழியாகக் கீழே விழுந்தது தெரியவந்தது.

தூக்கியெறியப்பட்ட வீடியோ
தூக்கியெறியப்பட்ட வீடியோ

கோகிலா பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்த காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டைமேடு பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.