Live: தஞ்சாவூர் விபத்து - உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி... சம்பவ இடத்தில் ஆய்வு!
தஞ்சாவூர் தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!
உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி... சம்பவ இடத்தில் ஆய்வு!
இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு சென்றார்.
பின்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து, விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டவர், அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். முதல்வருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கே.என்.நேரு, எம்.பி டி.ஆர்.பாலு மற்றும் அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.
தஞ்சாவூர் தேர்த் திருவிழா விபத்து... ஒருநபர் விசாரணைக்குழு அமைப்பு

தஞ்சாவூர் தேர்த் திருவிழா விபத்து குறித்து விசாரிக்க குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். விபத்துக்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு, இனிவரும் காலங்களில் இதுபோல் நடைபெறாமல் தடுக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``அரசிடம் கூறாமல் திருவிழா நடந்திருக்கிறது” - சேகர் பாபு

தஞ்சை தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், ``அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இந்தத் திருவிழா நடந்திருக்கிறது. களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்த் திருவிழாவும் அல்ல, அது தேரும் அல்ல, அது சப்பரம். அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் ஊர் மக்களே இந்தச் சப்பரத் திருவிழாவை நடத்தியிருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்
டி.டி.வி.தினகரன் இரங்கல்!

``தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு அப்பர் கோயில் தேர்த் திருவிழாவில் நேர்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவ்விபத்தில் பலியானோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல், உரிய முறையில் விசாரித்து விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
இனிவரும் காலங்களில் மக்கள் பெருமளவில் கூடும் திருவிழாக்களில் மிகுந்த கவனத்தோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” - டி.டி.வி.தினகரன்
மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

``களிமேடு தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தைத் தருகிறது. இது போன்ற கூடுகைகளில் விழா ஏற்பாட்டாளர்களுடன் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் ஆகியோர் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாதுகாப்பான விழாக்களுக்கான நெறிமுறைகள் உறுதியாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும்.” - மநீம தலைவர் கமல்ஹாசன்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

``தஞ்சாவூர், களிமேடு அப்பர் கோயில் தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டுகிறேன். மரணமடைந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் , காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
``தஞ்சாவூரில் தேர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட அசம்பாவிதம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
``மனம் ஏற்க மறுக்கின்றது.” - அண்ணாமலை

``தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். மூன்று சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எம்.பி கனிமொழி இரங்கல்!

``தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் . உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

``தஞ்சை களிமேடு பகுதி தேர்த் திருவிழாவில் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டபோது மின்சாரம் தாக்கிய கொடூர விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது பெருந்துயரம். உறவினர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்." - திமுக எம்.பி கனிமொழி
``மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்”மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
``விபத்து குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன்.” - மோடி.

``தஞ்சை அருகே நடந்த தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். மேலும் உயிரழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும்” என பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

``தஞ்சாவூர் ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியானது வார்த்தைகளில் சொல்ல முடியாத சோகம். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
நேரில் செல்லும் முதல்வர் ஸ்டாலின்!

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் சொல்ல முதல்வர் ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்குச் செல்லும் அவர் அங்கிருந்து கார் மூலம் களிமேடு செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தஞ்சை தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி விபத்து!

தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின்அழுத்தக் கம்பியில் உரசியதில் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 94-வது ஆண்டாக இந்தத் தேர் விழா நடைபெற்றுவருகிறது. இது வரை ஒரு சிறு அசம்பாவிதம்கூட ஏற்பட்டதில்லை. இந்த முறை ஆறாத வடுவை ஏற்படுத்தும் அளவுக்கான விபத்து ஏற்பட்டுவிட்டதாக ஊர்ப் பெரியவர்கள் கண்கலங்கினர்.
விபத்து குறித்த கூடுதல் தகவல்களுக்கு...
தஞ்சை: தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி விபத்து... 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சோகம்