Published:Updated:

`விபத்தில் இறந்த நண்பரின் மகள்!' -வேதனையில் வேளாங்கண்ணி பூ வியாபாரி எடுத்த விபரீத முடிவு

மாணவி மகரஜோதி
மாணவி மகரஜோதி

தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நண்பரின் மகள் விபத்தில் இறந்ததால், மனவேதனையடைந்த பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் மதியழகன். இவரின் மகள் மகரஜோதி. இவர் நாகூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 8 -ம் தேதி மதியழகனின் நண்பரான பூ வியாபாரி வீரமணியுடன் மோட்டார் சைக்கிளில் மகரஜோதி பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் பரவை என்ற இடத்தில் வீரமணி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது, அரசு விரைவுப் பேருந்து ஒன்று எதிர்பாராவிதமாக மோதியது.

வீரமணி
வீரமணி

இதில் வீரமணி, மகரஜோதி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்திருந்த மகரஜோதியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். லேசான காயமடைந்த வீரமணி சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தன் கண் முன்பு நண்பரின் மகள் மகரஜோதி உயிரிழந்தது குறித்து தாங்கமுடியாத வேதனையில் வீரமணி இருந்துள்ளார். இதனால் வீட்டுக்கும் அவர் செல்லவில்லை. வீரமணியைத் தேடி அவரின் உறவினர்கள் பல இடங்களில் அலைந்தனர். இந்நிலையில் நேற்று காலை சின்ன மண்டுவாங்கரைப் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வீரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வேளாங்கண்ணி போலீஸார், வீரமணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

`6 மாதங்களாக வேலை இல்லை, மனஅழுத்தம்!'- குழந்தைகளோடு விபரீத முடிவெடுத்த தந்தை

`நண்பரின் மகள் சாவுக்கு தான் காரணமாகி விட்டோமோ' என்ற மன உளைச்சலில்தான் வீரமணி தற்கொலை செய்துகொண்டாரோ! இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பின் செல்ல