Published:Updated:

`49 மாடிகள் கொண்ட வானுயர்ந்த கட்டடம்... தாமதமாக ஒலித்த அலாரம்?!’ -ஷார்ஜாவைப் பதற வைத்த தீ விபத்து #Video

ஷார்ஜா தீ விபத்து
ஷார்ஜா தீ விபத்து ( From Twitter video )

இந்தக் கட்டடத்தில் இந்தியர்கள் யாராவது இருந்தார்களா என்ற தகவல்கள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. இதுதொடர்பான தகவலை இந்தியத் தூதரகம் வெளியிடவில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக அறியப்படும் ஷார்ஜாவில், நேற்று இரவு உயர்ந்த கோபுரம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ஜாவின் அல் நஹ்தா என்னும் பகுதியில் உள்ள அப்கோ டவர் (ABBCO TOWER) என்னும் குடியிருப்பில்தான் தீவிபத்து ஏற்பட்டது.

ஷார்ஜா தீ விபத்து
ஷார்ஜா தீ விபத்து
AP

அரபு நாடுகள், வானுயர்ந்த கட்டடங்களுக்குப் பெயர்பெற்றது என்று சொல்லும் அளவுக்கு அதிக அளவிலான உயர்ந்த கட்டடங்களைக் கொண்டது. ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் உள்ள அப்கோ டவர் 49 மாடிகள் கொண்ட குடியிருப்பு. இந்தக் கட்டடத்தின் 10 -வது மாடியில் நேற்று இரவு 9.05 மணியளவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

இந்தக் குடியிருப்பின் 10-வது மாடியில்தான் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் அந்தப் பகுதிக்கு வரும் முன், தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு அதிவேகத்தில் பரவியது என இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கட்டடத்தைச் சுற்றி 12 தீயணைப்புக் குழு, தீயை அணைக்கும் பணியிலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டன. கட்டடத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதில், 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியானது. உயிரிழப்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சம்பவம் நடைபெற்றது குடியிருப்பு பகுதி என்பதால், இந்த கட்டடத்தைச் சுற்றி இருக்கும் சுமார் 5 கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல அடுக்குகள் கார் பார்க்கிங் வசதி கொண்ட இந்தக் கட்டடத்தில் இருந்த கார்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமாயின.

கட்டடத்தில் இருந்த பலருக்கும் முதலில் விபத்து ஏற்பட்ட விஷயமே தெரியவில்லை என்று கூறப்படுகிறது. தீ விபத்தால் ஏற்படும் ஸ்மோக் அலாரமும் தாமதமாக அடித்ததாகக் கூறப்படுகிறது. சிறிய அளவில் புகை ஏற்பட்டாலும் ஸ்மோக் அலாரம் எச்சரிக்கை செய்துவிடும். ஆனால், அந்தக் கட்டடத்தில் இருந்த பெண் ஒருவர், தான் ஏதோ எரிந்த வாசனையை உணர்ந்ததாகவும், அதனால் ஜன்னல் கதவைத் திறந்து பார்த்த போது புகைமூட்டமாக இருந்ததாகவும், அந்த நேரத்தில் தான் கட்டடத்தில் அலாரம் அடிக்கத் தொடங்கியது எனவும் தெரிவித்ததாக, 'கலீஜ் டைம்ஸ்' ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும் தப்பிக்க ஓடிய மக்கள், மூடியிருந்த ஃப்ளாட்களின் கதவுகளைத் தட்டி தீ விபத்து தொடர்பாக தெரியப்படுத்திச் சென்றதாக அந்தக் கட்டடத்தில் இருந்த வேறு ஒருவர் தெரிவித்தார்.

ஷார்ஜா தீ விபத்து
ஷார்ஜா தீ விபத்து
From Twitter Video

இந்தக் கட்டடத்தில் இந்தியர்கள் யாராவது இருந்தார்களா என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பான தகவலை இந்தியத் தூதரகம் வெளியிடவில்லை. இந்தக் கட்டடத்தில், வேலைக்காக வெளிநாட்டிலிருந்து வந்து வாடகைக்குத் தங்கி இருப்பவர்களும் உண்டு. இவர்கள், தற்போது தங்களது உடமைகள், அடையாள அட்டை என எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகக் கூறுகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு