Published:Updated:

மேட்டூர்: பணியாளர்கள்மீது சரிந்து விழுந்த ரயில்வே சுற்றுச்சுவர்! - பதறவைத்த விபத்து

சுற்றுச்சுவர் இடிந்த காட்சி
சுற்றுச்சுவர் இடிந்த காட்சி

மேட்டூர் ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர், பணியாளர்கள்மீது சரிந்து விழும் வீடியோ காட்சி வெளியாகியிருக்கிறது. நெஞ்சைப் பதறவைக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

சேலம் மாவட்டம், மேட்டூர் ரயில் நிலையத்தில் நேற்று சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில், ரயில்வே டிராக்கில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண் பலியானார். உடன் வேலை செய்துகொண்டிருந்த நான்கு பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்நிலையில் ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர், பணியாளர்கள்மீது சரிந்து விழும் வீடியோ காட்சி வெளியாகியிருக்கிறது.

சுவர் இடிந்து விழுந்த காட்சி
சுவர் இடிந்து விழுந்த காட்சி

நெஞ்சைப் பதறவைக்கும் இந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைதளத்தில் பரவிவருகிறது. மேட்டூர் ரயில் நிலையத்திலிருந்து சேலம் வரை இரண்டாவது ரயில்வே டிராக் அமைக்கப்பட்டுவருகிறது. ரயில்வே டிராக்கின் அருகே குடியிருப்புகள் இருப்பதால், இந்தப் பகுதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுவருகிறது. இந்த நிலையில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நேற்று புதுசாம்பள்ளி கிராஸ் ரோடு அருகே நடைபெற்றது. இப்பகுதியில் ஏற்கெனவே பழைய சுற்றுச்சுவர் ஒன்று இருந்தது.

கடந்த வாரம் பெய்த தொடர்மழை காரணத்தால், இந்தப் பழைய சுற்றுச்சுவர் ஈரமாக இருந்தது. பழைய சுற்றுச்சுவர் அருகே தங்கப்பொண்ணு, லட்சுமி, பத்மராஜன், கோகிலா, சீனிவாசன், கவிதா ஆகியோர் கட்டட வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென பழைய சுற்றுச்சுவர் சரிந்து, கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது விழுந்தது. இதில் ஐந்து பேரும் படுகாயமடைந்தனர்.

சுவர் இடிந்து விழுந்த காட்சி
சுவர் இடிந்து விழுந்த காட்சி

உடனே அவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டனர். ஆனால் படுகாயமடைந்த கவிதா, பாதி வழியிலேயே இறந்துவிட்டார். மற்றவர்கள் மேட்டூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் விசாரித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் சிவகாமி மற்றும் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டூர், கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் வசந்தி, ``நாங்கள் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து பார்த்ததில், அந்தப் பாழடைந்த சுற்றுச்சுவர் அருகே கழிவுநீர்க் கசிவு இருந்துகொண்டிருந்தது.

வசந்தி
வசந்தி

அந்தப் பகுதியிலுள்ள மக்களிடம் விசாரித்தபோது கெம்பிளாஸ்ட் நிறுவனத்தின் பைப்புகள் அந்த வழியாகச் செல்வதாகவும், சுற்றுச்சுவர் கட்டுவதற்காக அடித்தளம் போடுவதற்காக பொக்லைன் மூலமாக குழிபறிக்கும்போதே சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததாகக் கூறினார்கள். ரயில்வேதுறையின் கவனக் குறைவே இந்த சம்பவத்துக்குக் காரணம். உயிரிழந்தவர் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு