Published:Updated:

`1,000 கி.மீ தொலைவு; சைக்கிளில் பயணம்!’ - உணவு இடைவேளையில் தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்

விபத்து
விபத்து

ஊரடங்கு காலத்தில், 1,000 கி.மீ தாண்டி இருக்கும் தன் சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்ற பீகார் தொழிலாளி, சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மோசமாகியுள்ளது. வெளியூர், வெளி மாநிலங்களில் வேலை செய்துவந்தவர்களுக்கு தற்போது வேலை இல்லாததால், அனைவரும் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால் நடைப்பயணமாகவோ, சைக்கிளிலோ அல்லது கிடைக்கும் வாகனங்களிலோ செல்கின்றனர். இதனால் மத்திய அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்துகொடுத்துள்ளது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
AP

இந்நிலையில், 26 வயதான சாகித் அன்சாரி என்பவர், தான் வேலை செய்து வந்த டெல்லியிலிருந்து சொந்த ஊரான பீகாரின் கிழக்கு சம்பரான் பகுதிக்கு மே 5-ம் தேதி, தன் நணபர்கள் 7 பேருடன் சைக்கிள் மூலம் பயணம் செய்யத் தொடங்கியுள்ளார். டெல்லியிலிருந்து இவரது சொந்த ஊருக்கு 1,000 கி.மீ தொலைவு இருக்கும். இதை சைக்கிளிலேயே கடந்துவிட திட்டமிட்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை பாதி தொலைவு தாண்டிவிட்ட நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், ஒரு சாலையோரத்தில் ஓய்வெடுத்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, திடீரென்று வேகமாக வந்த கார் ஒன்று அன்சாரி மீது மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளானார். சாலையோரமிருந்த மரத்தால் அன்சாரியுடன் வந்தவர்கள் விபத்திலிருந்து தப்பினர்.

பின்னர் புலம்பெயர்ந்த தொழிலாளியான அன்சாரியை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அன்சாரியின் உடலை, லக்னோவில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவரது வீட்டிற்கு அனுப்ப ஆம்புலன்ஸுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அலட்சியமாக கார் ஓட்டியதன் காரணமாக விபத்து ஏற்படுத்தியதாக ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், விபத்து நேர்ந்த பின் கார் ஓட்டுநர் இழப்பீடாக பணம் தருவதாகக் கூறி, பின்னர் அவரே அதை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
AP

இதேபோல, கடந்த வியாழக்கிழமை காலை, சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியும் அவரது மனைவியும் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவிலிருந்து பெமேதாரா மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த கிராமத்திற்குப் புறப்பட்டனர். அன்சாரி இறந்துபோன அதே சாலையில் நடந்த மற்றொரு விபத்தில், இந்தத் தம்பதிகள் முன்னர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தம்பதியின் ஐந்து வயதுக்குக் குறைவான இரண்டு குழந்தைகள் விபத்திலிருந்து தப்பிப் பிழைத்துள்ளனர். கொரோனாவைத் தாண்டி, அதனால் பிறபிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் இறந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு