Published:Updated:

`களைப்பால் தண்டவாளத்தில் தூக்கம்’ -14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரைப் பறித்த காலி சரக்கு ரயில்

ரயில் விபத்து
ரயில் விபத்து

நேற்று ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையிலிருந்து விஷவாயு கசிந்ததில் 12 பேர் பலியான நிலையில் இன்று மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் குறைந்தது 14 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் ரயில் மோதியதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் பலியானதாக வெளியாகும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
vikatan

கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை. நாடு முழுவதும் கையில் பைகளுடன் மாநிலங்கள் கடந்து தங்கள் சொந்த மாவட்டங்களை நோக்கி நடையாய் நடக்கும் தொழிலாளர்களின் நிலை மிகக் கொடூரமானது.

தற்போது, மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனினும் பலர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறி பெரும் விபத்து ஏற்பட்டது.

விபத்து
விபத்து

இந்தக் கொடூர விபத்தில் குறைந்தது 14 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே காவல் அதிகாரிகளும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலியான தொழிலாளர்கள் மகாராஷ்டிராவின் ஜால்னா பகுதியில் இயங்கி வரும் இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு பயணமாகியுள்ளனர் இந்தத் தொழிலாளர்கள். தாங்கள் தங்கி இருக்கு இடத்திலிருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டால் அங்கிருந்து ரயில் மூலம் சொந்த ஊருக்குச் சென்று விடலாம் என ரயில் தண்டவாளத்திலே நடந்திருக்கிறார்கள். 45 கிலோ மீட்டர்கள் ரயில் பாதை வழியே சென்றவர்கள், இரவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரயில் வராது என்று தண்டவாளத்தில் படுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் காலியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் 14 பேர் பலியாகியுள்ளனர். கடுமையான காயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் விபத்து
ரயில் விபத்து

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாள்களக கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவர்கள் எப்படியாவது ஊருக்குச் சென்று விடலாம் என்ற நம்பிக்கையில்தான் நடைப்பயணம் மூலம் தங்களது பயணத்தைத் தொடங்கியிருப்பார்கள். தற்போது இந்தக் கோர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையிலிருந்து விஷவாயு கசிந்ததில் 12 பேர் பலியான நிலையில் இன்று மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் குறைந்தது 14 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

`நள்ளிரவில் மீண்டும் கசிவு; குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட PTBC ரசாயனம்!’ #VizagGasLeak அப்டேட்ஸ்
அடுத்த கட்டுரைக்கு