Published:Updated:

அந்த இடத்துலயே ஆறு உசுரு... போகிற வழியிலே மூணு உசுரு.. ஆஸ்பத்திரியில ரெண்டு உசுரு...

ஜவ்வாது மலை
பிரீமியம் ஸ்டோரி
ஜவ்வாது மலை

- மரண ஓலத்தில் ஜவ்வாது மலை!

அந்த இடத்துலயே ஆறு உசுரு... போகிற வழியிலே மூணு உசுரு.. ஆஸ்பத்திரியில ரெண்டு உசுரு...

- மரண ஓலத்தில் ஜவ்வாது மலை!

Published:Updated:
ஜவ்வாது மலை
பிரீமியம் ஸ்டோரி
ஜவ்வாது மலை

ஏப்ரல் 2-ம் தேதி, ஜவ்வாது மலைப் பள்ளத்தாக்கில், மினி வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 உயிர்கள் (வயிற்றிலிருந்த சிசுவைச் சேர்க்காமல்) பலியாகியிருக்கின்றன. இறந்தவர்கள் அனைவரும் திருப்பத்தூர் மாவட்டம், புலியூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள். என்ன நடந்தது என்று அறிந்துகொள்ளவும், அவர்களின் பிரச்னைகளை கவனப்படுத்தவும் அங்கு கிளம்பிச் சென்றோம்!

திருப்பத்தூர் நகரிலிருந்து திருவண்ணா மலைக்குச் செல்லும் சாலையில் 12 கி.மீ தூரத்துக்குச் சென்றால், அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட வனப்பகுதி வருகிறது. அங்குள்ள வனத்துறைச் சோதனைச்சாவடியிலிருந்து மலை மேலிருக்கும் 32 கிராமங்களுக்கும் செல்ல 30 கி.மீ தொலைவுக்குக் குறுகிய தார்ச்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இரவு 10 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பதற்றத்துடனேயே ஊசி வளைவுகளில் பயணித்து, ஒருவழியாகப் புலியூரைச் சென்றடைந்தோம்.

அந்த இடத்துலயே ஆறு உசுரு... போகிற வழியிலே மூணு உசுரு.. ஆஸ்பத்திரியில ரெண்டு உசுரு...

ஊரே அமைதியிலும் துயரத்திலும் மூழ்கியிருந்தது. கண்ணீரும் விசும்பலுமாக ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். ஊர்த் தலைவர் மற்றும் விபத்தில் சிக்கித் தப்பியவர்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம், ‘‘இந்த மலையில கண்ணுக்கே தெரியாத இடத்துலகூட மக்கள் வசிக்கிறாங்க. நல்லது கெட்டதுக்குத்தான் எல்லா ஊர் சனமும் கூடும். பக்கத்து மலை உச்சியில இருக்கிற ஆஞ்சநேயர் சாமிதான் சுத்துவட்டாரத்துல இருக்குற எல்லா சனத்துக்கும் குலதெய்வம். அறுவடையான முதல் படி நெல்லை, மலையைக் காப்பாத்துற மாருதிக்குத்தான் படையல் போடுவோம். அப்புறம், பங்குனி மாசத்துல ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு நாளைக்குப் பொங்கல்வெச்சு வழிபடுறது வழக்கம். சம்பவம் நடந்த அன்னைக்கு, பொங்கல்வெக்கிறதுக்காக எங்க ஊர் சனங்க புள்ளைகுட்டிகளோட மினி லோடு வேனுல ஏறிப்போனோம்.

மலை உச்சியில ஏறிப் போறப்போ, வேன் கவுந்துபோச்சு. அநியாயமா 11 உயிர் போச்சு. இதுல நாலு சின்ன உசுருங்க... ஒரே குடும்பத்துலயே அம்மாவும் ரெண்டு பொண்ணுங்களும்னு மூணு பேர் செத்துப்போயிட்டாங்க. அது மட்டுமில்லாம, ஏழு மாச கர்ப்பிணி ஒருத்தியும் செத்துப்போயிட்டா. இந்த உலகத்தை வெளியில வந்து பார்க்குறதுக்கு முன்னாடியே அவ வயித்துலருந்த சிசுவும் கண்ணு மூடிப்போச்சு. பவித்ரானு 18 வயசு பொண்ணு... அதுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டிருந்தோம். தனக்குக் கல்யாணம் ஆகப்போற சந்தோஷத்துல சாமிக்கு விளக்குப்போடப் போச்சு, அதுவும் செத்துப்போச்சு. கல்யாணக் கோலத்துல பார்த்து சந்தோஷப்பட வேண்டியவளை பொணமா பார்த்தப்போ, இந்தப் பொறப்பையே வெறுத்துட்டோம் சாமி.

செல்போன் டவர் இங்கே சரியா கிடைக்கிறதில்லை. அதனால, விபத்து நடந்ததும் ஆம்புலன்ஸுக்கும் போலீஸுக்கும் தகவல் கொடுக்க முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டுட்டோம். பதினொன்றரை மணிக்கு விபத்து நடந்தது. அந்த இடத்துல சிக்னல் கிடைக்காததால, சிக்னல் கிடைக்குற எடத்துக்கு ஓடிவந்துதான் தகவல் கொடுத்தோம். அதனால, போலீஸுக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் சேரவே ஒரு மணிக்கு மேலாயிடுச்சு. விபத்து நடந்தது எந்த இடம்னு அவங்களாலயும் சரியா கண்டுபிடிச்சு வர முடியலை. வேற வழியில்லாம, செத்தவங்களை அங்கேயே விட்டுட்டு, குத்துயிரும் குலையுயிருமா கிடந்தவங்களைத் தோள் மேல தூக்கிப் போட்டுக்கிட்டு, மலை உச்சியிலருந்து கீழ ஓடி வந்தோம். அங்கிருந்து பைக் நடுவுல உட்கார வெச்சு புடிச்சுக்கிட்டே போகும்போது, நடுவழியில ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்துச்சு. பிறகு அதுல ஏத்திவிட்டோம். அதுக்குள்ள ரெண்டரை மணி ஆகிப்போச்சு.

அந்த இடத்துலயே ஆறு உசுரு... போகிற வழியிலே மூணு உசுரு.. ஆஸ்பத்திரியில ரெண்டு உசுரு...

விபத்து நடந்த அந்த இடத்துலயே செத்தது ஆறு பேருன்னா... தூக்கிட்டுப் போற வழியிலேயே மூணு உசுரு போயிடுச்சு. மீதி ரெண்டு உசுரு, ஆஸ்பத்திரியில போச்சு. மலையில செத்துப்போனவங்களை டோலி கட்டி தூக்கிக் கொண்டுவந்தோம். இப்ப, ஊரே துக்கத்துல கெடக்குது. 11 பிணங்களையும் திருப்பத்தூர் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல அறுத்து, போஸ்ட்மார்ட்டம் பண்ணி பொட்டலத்துல கட்டி, போலீஸ்காரங்க கொண்டு வந்தப்ப, நடுராத்திரி ஆகிருச்சு. நேரா சுடுகாட்டுக்குக் கொண்டுபோய் பொக்லைன்ல பள்ளம் தோண்டி புதைத்துச்சுட்டாங்க. கடைசியா ஒருத்தர் முகத்தையும் பார்க்கவிடலை. ‘கோடியில புரண்டாலும் கோடித்துணி மட்டுமே நிலைக்கும்’னு சொல்லுவாங்க. அந்தத் துணிகூட எங்க சனத்துக்கு நிலைக்கலைன்னு நெனைக்கையில, ‘வாயு புத்திரா... உனக்குக் கண்ணில்லையாப்பா?’னு கேட்கத் தோணுது.

எங்க பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்க யாருமில்லை. விபத்துல இறந்தவங்களுக்கு ரெண்டு லட்சமும், காயமடைஞ்சவங்களுக்கு ஐம்பதாயிரமும் கொடுக்குறதா சொல்லியிருக்கிறாரு முதல்வர். அதுமட்டும் போதாதுங்க... தாய், தந்தையை இழந்த பசங்களுக்கான கல்விச் செலவு, திருமணச் செலவை அரசாங்கம் ஏத்துக்கணும். காயமடைஞ்சவங்க நிலைமை மோசமா இருக்கிறதா டாக்டருங்க சொல்றாங்க. அவங்க முழுமையா குணமடைஞ்சு வீட்டுக்கு வர்றதுக்கான மருத்துவச் செலவையும் அரசாங்கம் செய்யணும். அதோடு, தரமான சாலை வசதியையும் அமைச்சுக் கொடுத்து, இருக்குற உசுருகளைக் காப்பாத்தணும்’’ என்றார்கள் வலி நிறைந்த வார்த்தைகளில்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் உதவியும் உடனடியாகக் கிடைக்க வேண்டும். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்!