Published:Updated:

`ஓடி விளையாடாதே; இல்லைனா சுட்டுவிடுவேன்' - வேடிக்கை விபரீதமானதால் தாய், குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நாட்டுத் துப்பாக்கியை சிறுவன் விளையாட்டாக இயக்கியதில் தாய், குழந்தை இருவரும் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கி
துப்பாக்கி

இலுப்பூர் அருகே உள்ள எருதுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு (49). இலுப்பூர் மேலப்பட்டியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவரது வீட்டுக்கு எதிரே வசித்து வரும் விஜயக்குமார் என்பவரின் மனைவி நீலாவும் (26), இவர்களின் மகன் அஜித் (3) இருவரும் செல்லக்கண்ணு வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு, செல்லக்கண்ணுவின் மனைவியிடம், நீலா நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளார். குழந்தை அஜித் வீட்டுக்குள் ஓடி விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, அஜித் வீட்டுக்குள் இருந்த சில பொருள்களைக் கலைத்துப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்குள் வந்த செல்லக்கண்ணுவின் மகன் தேவசேனாதிபதி (15), அஜித்திடம் `ஓடி விளையாடாதே இல்லையென்றால், துப்பாக்கியால் உன்னைச் சுட்டு விடுவேன்' என விளையாட்டுத் தனமாக மிரட்டியுள்ளார். செல்லக்கண்ணு அரசு உரிமம் பெற்று துப்பாக்கி வாங்கி வைத்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துப்பாக்கியில் குண்டுகளை லோடு செய்துவைத்துள்ளார்.

துப்பாக்கி
துப்பாக்கி

துப்பாக்கியை லோடு செய்தவர் அதை அகற்றாமல் அப்படியே வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில்தான், தேவசேனாதிபதி பேச்சைக் கேட்காமல் அஜித் தொடர்ந்து, ஓடி விளையாடவே கோபமடைந்த தேவசேனாதிபதி துப்பாக்கியை எடுத்து மீண்டும் மிரட்டியபோது, நீலா ஓடி வந்து அஜித்தை தூக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி டிக்கரில் தேவசேனாதிபதியின் கை பட்டு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் நீலா மற்றும் அஜீத் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் சிகாமணி விசாரணை நடத்தினார். இதுகுறித்து இலுப்பூர் போலீஸார், வழக்கு பதிவு செய்து, செல்லக்கண்ணுவை கைது செய்து சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.