Published:Updated:

`காதல் கணவரோடு ஏற்பட்ட தகராறு' -சென்னையில் 2 குழந்தைகளோடு விபரீத முடிவெடுத்த தாய்

சம்பவம் நடந்த தண்டவாளம்
சம்பவம் நடந்த தண்டவாளம்

சென்னை ஆவடி - இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கு நடுவில் இன்று காலை 2 குழந்தைகளோடு தாய், ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் சென்னை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி விஜயலட்சுமி (24). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு கவிசரண் (2). விஷ்வந்த் (3 மாதம்) என இரண்டு குழந்தைகள். ஆரம்பத்தில் சந்தோஷமாகச் சென்ற இந்தத் தம்பதியின் வாழ்க்கையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்
`நீயே இப்படிப் பேசினால் என்ன செய்வேன்?'- ஆசிரியை தற்கொலை வழக்கில் பேராசிரியர் வாக்குமூலம்

வழக்கம்போல நேற்றிரவும் முத்துமாரிக்கும் அவரின் மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியில் சென்றார். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. மனைவி, குழந்தைகளை முத்துமாரி தேடினார். விஜயலட்சுமி குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் உறவினர்களிடமும் விசாரித்தார். ஆனால், எந்தத் தகவலும் தெரியவில்லை.

இந்தநிலையில் ஆவடி - இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கிடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாகவும் அதன் அருகில் குழந்தைகளின் சடலங்கள் கிடப்பதாகவும் ஆவடி ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

இதுதொடர்பாக வழக்குப் பதிந்த ஆவடி ரயில்வே போலீஸார், இறந்து கிடந்தவர்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் விஜயலட்சுமி என்றும் குழந்தைகள் கவிசரண், விஷ்வந்த் எனத் தெரியவந்தது. இதையடுத்து முத்துமாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முத்துமாரி மற்றும் விஜயலட்சுமியின் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். சடலமாகக் கிடந்த மூன்று பேரைப் பார்த்து கதறி அழுதனர். சடலங்களை எடுக்கும் வரை சோகத்தோடு தண்டவாளத்தின் அருகிலேயே விஜயலட்சுமியின் உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்தது எப்படி? - ஹைதராபாத் ரயில் விபத்தின் பின்னணி

இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், ``2 குழந்தைகளுடன் விஜயலட்சுமி, காலை நேரத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்க வேண்டும். விஜயலட்சுமியின் தற்கொலை குறித்து முத்துமாரியிடம் விசாரித்து வருகிறோம். அவரின் செல்போனுக்கு கடைசியாக வந்த போன் அழைப்புகளையும் ஆய்வு செய்துவருகிறோம். விசாரணையின் முடிவில்தான் 2 குழந்தைகளுடன் விஜயலட்சுமி தற்கொலை செய்துகொண்டது பற்றி தெரியவரும்" என்றனர்.

ஆவடி ரயில் நிலையம்
ஆவடி ரயில் நிலையம்

குழந்தைகளோடு தாய், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவத்தால் சென்னை - திருவள்ளூர் ரயில் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன்காரணமாகக் காலதாமதமாக ரயில்கள் சென்றன.

அடுத்த கட்டுரைக்கு