Published:Updated:

லாரி மோதி தாய், மகள் பலி; ஒரே மாதத்தில் விபத்தில் சிக்கிய 11 பேர்! - அச்சத்தில் குமாரபாளையம் மக்கள்

நாமக்கல் மாவட்டம், வட்டமலையில் மொபட்டில் சென்ற தாய், மகள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சித்ரா மற்றும் அவரின் மகள்
சித்ரா மற்றும் அவரின் மகள்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை வாத்தியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சித்ரா, பவானியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக வேலை செய்துவந்தார். இவர்களுக்கு 3-ம் வகுப்பு படிக்கும் யஷ்வந்த் என்ற மகனும், 1-ம் வகுப்பு படிக்கும் இன்சிகா என்ற மகளும் இருந்தனர். வேலைக்குச் செல்லும்போது வழக்கம் போல் மொபட்டில் மகன், மகளை பள்ளியில் விட்டுவிட்டுச் செல்வார் சித்ரா. நேற்று காலை 2 பேரையும் மொபட்டில் அழைத்துச்சென்று, முதலில் மகன் யஷ்வந்தை பள்ளியில் விட்டு விட்டு, பின்னர் மகள் இன்சிகாவை பள்ளியில் விடுவதற்காக சென்றார். அப்போது சித்ரா குமாரபாளையம் சர்வீஸ் ரோட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, சேலத்திலிருந்து கோவை நோக்கி வேகமாகச் சென்ற லாரி மொபட் மீது மோதியது.

வட்டமலை விபத்து
வட்டமலை விபத்து

இதில் தூக்கி வீசப்பட்ட சித்ராவும், இன்சிகாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதைப் பார்த்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் நடந்த குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டும், இந்த ஒரு மாதத்தில் 11 பேர் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடுரோட்டில் வெடித்துச் சிதறிய பட்டாசு வேன்... சிதைந்த உடல்கள்!- செஞ்சியைப் பதற வைத்த விபத்து

இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் கோவை நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மூர்த்தி என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் சித்ராவின் கணவர் ஜெயகுமாரின் தந்தை, தற்போது விபத்து நடந்த அதே இடத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாகச் சென்ற வாகனம் மோதி படுகாயமடைந்த அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

சித்ரா மற்றும் அவரின் மகள்
சித்ரா மற்றும் அவரின் மகள்

தற்போது கவலைக்கிடமான நிலையில் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ஜெயகுமார் அருகிலிருந்து கவனித்து வருகிறார். இந்த நிலையில், விபத்தில் அவரின் மனைவியும், மகளும் இறந்ததையறிந்த ஜெயகுமார், குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு மனைவி, மகளின் உடல்களைப் பார்த்து அவர் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. விபத்து நடந்த இடத்தில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.