Published:Updated:

`பைக்கின் இடைவெளியால் உயிர்தப்பிய 2 வயதுக் குழந்தை!' - ஹெல்மெட் அணியாததால் அம்மா, மகள் பலியான சோகம்

அம்மா சுதா
அம்மா சுதா

சென்னையில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஹெல்மெட் அணியாத அம்மா, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பைக்கின் இடைவெளியால் 2 வயதுக் குழந்தை தீபக் உயிர் தப்பினான்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம், அம்மன் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (35). கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி சுதா (25), இந்தத் தம்பதியின் மகள் ஷிவானி (5) மகன் தீபக் (2). சுதாவின் அம்மா வீடு பள்ளிக்கரணையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ளது. அங்கு, சுதா, தன் குழந்தைகளுடன் 15-ம் தேதி பைக்கில் வந்தார். அம்மா வீட்டில் அனைவரையும் பார்த்துவிட்டு மாலையில் சந்தோஷமாகக் குழந்தைகளுடன் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

விபத்தில் இறந்த ஷிவானி
விபத்தில் இறந்த ஷிவானி

கீழ்க்கட்டளை பகுதியில் மேடவாக்கம் - மடிப்பாக்கம் பிரதான சாலையில் பைக்கில் சுதா சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக் மீது தாம்பரத்திலிருந்து தி.நகருக்குச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதனால் நிலைதடுமாறிய சுதா, அவரின் மகள் ஷிவானி, மகன் தீபக் ஆகியோர் நடுரோட்டில் விழுந்தனர். இதில் சுதா, ஷிவானி ஆகியோர் மீது பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆனால், கீழே விழுந்த தீபக், காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

நடுரோட்டில் தாயும் மகளும் உயிரிழந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் கண்டக்டர் பழனியை சரமாரியாகத் தாக்கினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. இந்த விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் குமாரவேல், இன்ஸ்பெக்டர் பானுமதி மற்றும் போலீஸார் சுதா, ஷிவானி ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார்த்திகை தீபத்தால் மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்! - சென்னையில் 6 இடங்களில் தீ விபத்து

விபத்தில் தாய், மகள் இறந்ததையடுத்து பஸ் டிரைவர் தங்கய்யாவை போலீஸார் கைது செய்தனர். விபத்தில் 2 வயதுக் குழந்தை உயிர் தப்பியது எப்படி என்று போக்குவரத்து புலனாய்வு போலீஸாரிடம் கேட்டதற்கு, ``பெண்கள் ஓட்டும் பைக்கின் முன் பகுதியில் தீபக், நின்றுகொண்டிருந்தான். சுதா பைக்கை ஓட்ட அவரைக் கட்டிப்பிடித்தபடி ஷிவானி சீட்டில் அமர்ந்திருந்தாள். பைக்கை பேருந்து இடித்துத் தள்ளியபோது மூன்றுபேரும் கீழே விழுந்தனர். தீபக், பைக்கின் முன்பகுதிக்கும் சீட்டுக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்ததால் அவன் மீது பஸ்சின் சக்கரம் ஏறவில்லை. ஆனால், நடுரோட்டில் விழுந்துகிடந்த சுதா, ஷிவானி ஆகியோர் மீது பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் சுதா, ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியதால் அவரின் தலைநசுங்கியது" என்றனர்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவாகவே இருந்தது. இதனால் வாகனங்கள் வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. இந்தச் சமயத்தில் 2 குழந்தைகளுடன் பைக்கில் வந்தார் சுதா. அப்போது அரசுப் பேருந்து சுதாவின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால்தான் சுதா, ஷிவானி மீது பஸ்சின் சக்கரங்கள் ஏறி இறங்கின.

பெண்கள் ஓட்டும் பைக்கின் முன் பகுதியில் தீபக், நின்றுகொண்டிருந்தான். சுதா பைக்கை ஓட்ட அவரைக் கட்டிப்பிடித்தபடி ஷிவானி சீட்டில் அமர்ந்திருந்தாள். பைக்கை பேருந்து இடித்துத் தள்ளியபோது மூன்றுபேரும் கீழே விழுந்தனர். தீபக், பைக்கின் முன்பகுதிக்கும் சீட்டுக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்ததால் அவன் மீது பஸ்சின் சக்கரம் ஏறவில்லை.

பஸ்சில் இருந்தவர்களும் விபத்தை நேரில் பார்த்தவர்களும் சத்தம் போட்ட பின்னர்தான் பஸ்ஸை டிரைவர் நிறுத்தினார். சுதா, ஷிவானி ஆகியோரின் உடலில் எந்தவித அசைவும் இல்லை. ஆனால், பைக்கிலிருந்து தீபக் அழுத சத்தம் மட்டும் கேட்டது. உடனே அவனை அங்கிருந்தவர்கள் தூக்கி, முதலுவி சிகிச்சை அளித்தனர். அவன் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. பின்னர், தீபக்கின் உறவினர்களிடம் அவனை ஒப்படைத்தோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு