Published:Updated:

மூணாறு நிலச்சரிவு: `செல்ல மகள் மீண்டு வருவாள்!’ - காத்திருக்கும் முத்துலெட்சுமியின் பெற்றோர்

நிலச்சரிவு மீட்புப்பணி
நிலச்சரிவு மீட்புப்பணி

மூணாறு நிலச்சரிவில் சிக்கி மாயமான ஒன்பது மாத கர்ப்பிணி மகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரியாததால், பெற்றோரும் உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகேயுள்ள ராஜமலை, பெட்டிமுடியில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கடும் வெள்ளப்பெருக்கால், 25 குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டன. அங்கு வசித்த 82 பேரில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதமுள்ள 71 பேரும் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த 7-ம் தேதி முதல் தற்போது வரை 51 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 7 குழந்தைகள் உட்பட 19 பேர் மண்ணில் புதைந்து இருப்பதாகக் கருதப்படுகிறது.

மாயமான  கர்ப்பிணி முத்துலெட்சுமி
மாயமான கர்ப்பிணி முத்துலெட்சுமி

இதனால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இவர்கள் அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் பாரதி நகரைச் சேர்ந்த 25 பேரும் அடங்குவர். இதனால், அப்பகுதியே பெரும் சோகத்துடன் காணப்படுகிறது. கயத்தார் அருகிலுள்ள தலையால்நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்ற ஒன்பது மாத கர்ப்பிணியும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்.

மூணாறு நிலச்சரிவு: மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை #SpotVisit

தலையால்நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியம் மற்றும் காமாட்சியின் ஒரே மகள் முத்துலெட்சுமி. டிப்ளோமா நர்ஸிங் படித்த இவருக்கு கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் பாரதிநகரைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தியுடன் திருமணம் நடைபெற்றது. தீபன் சக்கரவர்த்தி, தனது பெற்றோருடன் பெட்டிமுடியில் தங்கியிருந்து தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துவந்திருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு கணவர் தீபன் சக்கரவர்த்தியுடன் பெட்டிமுடியில் வாழ்ந்துவந்தார் முத்துலெட்சுமி.

முத்துலெட்சுமியின் பெற்றோர்
முத்துலெட்சுமியின் பெற்றோர்

இதற்கிடையில் முத்துலெட்சுமி கர்ப்பம் அடைந்தால், இருவரும் சொந்த ஊரான கயத்தாருக்கு வராமல் அங்கேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். வரும் 28-ம் தேதிக்குள் முத்துலெட்சுமிக்கு குழந்தை பிறக்கும் என அங்குள்ள மருத்துவர் கூறியுள்ளார். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கிய தீபன் சக்கரவர்த்தியின் குடும்பத்தில், அவரும் அவரின் தாயாரும் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மற்றவர்களின் நிலை குறித்துத் தெரியவில்லை. அவரின் கர்ப்பிணி மனைவி முத்துலெட்சுமியின் விவரம் குறித்தும் தெரியவில்லை. இதனால், முத்துலெட்சுமியின் பெற்றோர், உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

`சென்னை, கேரள வெள்ளம்; தற்போது மூணாறு’- மீட்புப் பணிகளில் கவனம் ஈர்த்த ரேகா நம்பியார்

இது குறித்து முத்துலெட்சுமியின் உறவினர்களிடம் பேசினோம், ``முத்துலெட்சுமி அவளோட அப்பா பாக்கியம்மேல ரொம்பப் பாசம்வெச்சிருக்கா. பாக்கியமும் தினமும் மகளுக்கு போன் செஞ்சு பேசிக்கிட்டுதான் இருப்பார். இந்த மாசம் 1-ம் தேதிதான் கடைசியா போன்ல ரெண்டு பேரும் பேசினாங்க. அதுக்குப் பிறகு கனமழை தொடர்ந்ததால, மின்சாரம் துண்டிப்பு காரணமாகப் பேசலை. ஒன்பது மாத கர்ப்பிணியான தன் மகளுக்கு வளைகாப்பு நடத்தி, ஊருக்குக் கூட்டிட்டு வரணும்னு நாள் குறிச்சாரு பாக்கியம். கொரோனாவுனால அங்கேயே பிரசவம் பார்த்துக்கொள்வதாக மாப்பிளை வீட்டுல சொலிட்டாங்க. இந்த மாசம் 28-ம் தேதிக்குள்ள குழந்தை பிறந்துடும்னு அங்கே உள்ள டாக்டர் சொன்னதுனால, முத்துவோட அம்மா, அப்பா ரெண்டு பேருமே பேரக்குழந்தையைப் பார்க்கிற சந்தோஷத்துல இருந்தாங்க.

மீட்புப் பணி
மீட்புப் பணி

நிலச்சரிவின்போது `முத்துலெட்சுமியைக் கையில் பிடிச்சுக்கிட்டு ஓட முயன்றப்போ, திடீர்னு பாறைக்கல் ஒண்ணு உருண்டு வந்து விழுந்த பிறகு முத்துலெட்சுமியைக் காணவில்லை’னு சொல்லி அவர் கணவர் தீபனும் அழுது புலம்பியுள்ளார். முத்துலெட்சுமியோட அம்மா, அப்பாவுக்கு கல்யாணமாகி 11 ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே மக, வயித்துப் பிள்ளையோட மாயமாயிட்டா. செல்ல மகள் மீண்டு வருவானு நம்பிக்கையோட காத்திருக்காங்க” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு