Published:Updated:

என் தந்தை தேங்காய் விற்று என்னை படிக்க வைத்தார்... வி.ஐ.டி விஸ்வநாதன் நெகிழ்ச்சி

உழவர் களஞ்சியம்

விவசாயிகள் என்றாலே மரியாதைக் குறைவாக இருக்கிறது. விவசாயிகளுக்கு, மற்றவர்களுக்கு இருப்பதைப் போலவே செல்வாக்கு வளர வேண்டும், வருமானம் பெருக்க வேண்டும். அதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டுமா அதற்கு ஒரு வாய்ப்பாகத்தான் இந்த உழவர் களஞ்சியத்தைப் பயன்படுத்துகிறோம்...

என் தந்தை தேங்காய் விற்று என்னை படிக்க வைத்தார்... வி.ஐ.டி விஸ்வநாதன் நெகிழ்ச்சி

விவசாயிகள் என்றாலே மரியாதைக் குறைவாக இருக்கிறது. விவசாயிகளுக்கு, மற்றவர்களுக்கு இருப்பதைப் போலவே செல்வாக்கு வளர வேண்டும், வருமானம் பெருக்க வேண்டும். அதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டுமா அதற்கு ஒரு வாய்ப்பாகத்தான் இந்த உழவர் களஞ்சியத்தைப் பயன்படுத்துகிறோம்...

Published:Updated:
உழவர் களஞ்சியம்

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 6-வது ஆண்டாக `உழவர் களஞ்சியம் - 2022’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்க தொடக்க விழாவானது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ICAR , நபார்டு, தமிழ்நாடு அரசு வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் பசுமை விகடன் ஒத்துழைப்புடன் டிசம்பர் 14-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கி 15-ம் தேதி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.

உழவர் களஞ்சியம்
உழவர் களஞ்சியம்

இதன் விழாவில் பங்கேற்ற வி.ஐ.டி வேந்தர் ஜி.விஸ்வநாதன்,  இளமைக் காலத்தில்தான் விவசாய பணிகள் செய்ததை நினைவு கூர்ந்து பேசுகையில், ``கொரோனா தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக உழவர் களஞ்சியம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெறுவது மகிழ்ச்சி. கடந்த ஓர் ஆண்டாக பாலாற்றில் தண்ணீர் வற்றாமல் சென்றுகொண்டு உள்ளது. நான் வக்கீலாக, அமைச்சராக, வேந்தராக, எம்.எல்.ஏ-வாக இருந்த போதிலும் அடிப்படையில் நானும் ஒரு விவசாயிதான். என் தந்தை தேங்காயை விற்று என்னை படிக்க வைத்தார். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வார விடுமுறை உண்டு. ஆனால், விவசாயிகளுக்கு விடுமுறையே கிடையாது. எனவே, விவசாயிகளுக்கு உரிய அந்தஸ்தை வழங்க முடியுமா என நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மழை குறைவாக பெய்யக்கூடிய பகுதி, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 6 சதவிகிதம்தான் தமிழ்நாடு நிலப் பகுதி. ஆனால், மக்கள் தொகையில் 7 சதவிகிதமாக இருக்கிறோம், நீராதாரத்தில் 3 சதவிகிதம்தான். இயற்கையாகவே நீர் ஆதாரம் குறைவான பகுதி இதை வைத்துக் கொண்டே நாம் விவசாயத்தில் வெற்றி காண வேண்டும். மற்ற நாடுகளிடம் போட்டி போடுகிற அளவுக்கு நாம் வர வேண்டும். நிலப்பரப்பில் இந்தியாவைவிட சீனா அதிகம்தான். ஆனால், விவசாய நிலம் என்பது இந்தியாவைவிடக் குறைவு. ஆனால், உற்பத்தியைப் பொறுத்தவரை சீனா நம்மைவிட இரண்டு மடங்கு உற்பத்தி செய்கிறார்கள். ஆகவே நாம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

விவசாயிகளைப் புகழ்வதற்கு தமிழில் பல வாக்கியங்கள் இருந்தாலும், விவசாயிகளை நம்மால் இன்னும் பாதுகாக்க முடியவில்லை. நம் நாட்டில் 1995 - 2014 வரை இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் விவசாயிகளின் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். அதில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தற்கொலைக்கு முக்கிய காரணம் கடன், கடன்களில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கு முழுமையான நடவடிக்கையை மைய அரசும், மாநில அரசும் எடுக்க வேண்டும். அவ்வப்போது கடன் தள்ளுபடிகள் நடந்தாலும் அது முழுமையாக நடைபெறவில்லை. 2021-ம் ஆண்டில் மட்டும்  தினந்தோறும் 15 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்துகொண்டே உள்ளது.

உழவர் களஞ்சியம்
உழவர் களஞ்சியம்

ஒரு சிலர் கோடிக்கணக்கில் கடன் வாங்கிக்கொண்டு அந்தக் கடனை திருப்பி கட்டாமல் லண்டனில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் நம் நாட்டுக்குக் கொண்டு வர அதற்கு கோடிகளில் செலவு செய்ய வேண்டும். ஆனாலும், அவர்களை நம் நாட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை.

 ஆனால், விவசாயிகள் கடன் வாங்கிக்கொண்டு அவர்களால் திருப்பி கட்ட முடியாமல் போனால் வீடு மற்றும் நிலத்தை ஜப்தி செய்வது, அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அதனுடைய விளைவுதான் அவர்களுடைய தற்கொலை, இதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முக்கிய பிரச்னையாக நான் பார்ப்பது ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்பு. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் இருந்த கால்வாய் தற்போது சென்று பார்த்தல் காணவில்லை. ஏரிகளில் எல்லாம் முள்ளு மரங்கள் முளைத்துவிட்டு இருக்கிறது ஆறுகளிலும் அதே நிலைமைதான். குடிமராமத்து பணி என்பது அரசாங்கதை நம்பி இல்லாமல் அந்தக் காலத்தில் விவசாயிகள் மூலமாக நடைபெற்றது. ஆனால், இப்போது அப்படி நடைபெறுவதில்லை. அதற்குக் காரணம் நிம்மதி இல்லை. கடன் வாங்கிக்கொண்ட விவசாயியால் எந்த செயலும் முழுமையாகச் செய்ய முடியவில்லை.

கிட்டத்தட்ட 42,000 ஏரிகள் தமிழ்நாட்டில் இருந்தது. தற்போது 39,000 ஏரியாகக் குறைந்துவிட்டது. 3,000 ஏரிகள் காணாமலே போய்விட்டன. 39,000 ஏரிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். ஒரு காலத்தில் மழை பெய்யாததால் கஷ்டப்பட்டோம். தற்போது மழை பெய்தும் கஷ்டப்படுகிற சூழ்நிலை உள்ளது. நீர்நிலைகளைக் காப்பதற்கு விவசாய சங்கங்களும் விவசாயிகளும் முன் வர வேண்டும்.

காவேரி
காவேரி

நம் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பது உண்மை. அதிகமாக மழை பெய்யும்போது தண்ணீரை சேமித்து வைக்காமல் ஆண்டுதோறும் சாதாரணமாக 100 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதிகமாக மழை பெய்யும்போது இது 1,000 டி.எம்.சி வரை வீணாகக் கடலில் கலக்கிறது. காவேரி பிரச்னையில் நாம் சுப்ரீம் கோர்ட் வரை சென்று தீர்ப்பு வாங்க 100 கோடி ரூபாய் வரை வக்கீல் பீசாக மட்டுமே செலவு செய்திருக்கிறோம்.

இப்போது அவர்கள் அதிகமாகத் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். மேட்டூர் அணையில் மண் ஏறிவிட்டதால் தற்போது 30% கொள்ளளவு குறைந்துவிட்டது. எப்படி ஏரிகளை தூர் வார வேண்டுமோ அதுபோல அணைகளையும் தூர் வார வேண்டும். பாலாற்றில் இரண்டு தடுப்பணைகள்தான் உள்ளன. அதுவும் வெள்ளைக்காரன் காலத்தில் கட்டியது, ஆந்திர பகுதியில் 25 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே ஓடும் பாலாற்றில் 17 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளது. நம் பகுதிகளிலும் தடுப்பணைகளைக் கட்டி தண்ணீர் சேமிக்க வேண்டும். காவேரி- கோதாவரி இணைப்பை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோமே தவிர அதற்கு எந்தவொரு தொடக்கமும் செய்யவில்லை.

உழவர் களஞ்சியம்
உழவர் களஞ்சியம்

விவசாயத்தில் உற்பத்தியைப் பெருக்க அறிவியல் தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.  விவசாயிகள் என்றாலே மரியாதைக் குறைவாக இருக்கிறது, விவசாயிகளுக்கு. மற்றவர்களுக்கு இருப்பதைப் போலவே செல்வாக்கு வளர வேண்டும். வருமானம் பெருக்க வேண்டும். அதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டுமா அதற்கு ஒரு வாய்ப்பாகத்தான் இந்த உழவர் களஞ்சியத்தைப் பயன்படுத்துகிறோம்" என்றார்.

முன்னதாக இந்தத் தொடக்க விழாவில் வி.ஐ.டி துணைத் தலைவர்களான ஜி.வி.செல்வம் மற்றும் ஜி.வி.சங்கர், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்ற திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் ராஜேந்திரன், நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் இ.ராஜு ஆகியோர் விவசாயிகளை ஊக்கப்படுத்தி பேசினார்கள்.