Published:Updated:

`போலீஸுக்கு பயந்து கேட்டைத் திறக்க முயன்றார், ஆனால்?' -நாகர்கோவிலில் போதை இளைஞருக்கு நேர்ந்த சோகம்

கம்பி குத்திய நிலையில் ராகேஷ்
கம்பி குத்திய நிலையில் ராகேஷ்

அவரது உடலில் குத்தியிருந்த கம்பியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடலிலிருந்து கம்பி அகற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு நேற்று காலை அரசு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக்கில் மது குடித்து போதையான இளைஞர் ஒருவர் போலீஸைக் கண்டு பயந்து ஓடியதில் பக்கத்து வீட்டு கேட்டின் மேல் உள்ள கம்பியில் சிக்கிக்கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

இதுகுறித்து நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "நாகர்கோவில் செட்டி தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ் (வயது 29). நேற்று இரவு பக்கத்து வீட்டின் கேட்டின் மேல் உள்ள கூர்மையான கம்பியில் இவரது விலா பகுதி குத்திய நிலையில் அலறிக்கொண்டிருந்தார். சத்தம் கேட்டு வந்து அவரை மீட்க சிலர் முயன்றனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தோம். தீயணைத்துறை வீரர்கள் அங்கு சென்று ஹைட்ராலிக் கட்டர் மூலம் கேட் கம்பிகளை வெட்டி அகற்றி ராகேஷை மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்றனர்.

ஹைட்ராலிக் கட்டர் மூலம் வெட்டப்படும் கேட் கம்பிகள்
ஹைட்ராலிக் கட்டர் மூலம் வெட்டப்படும் கேட் கம்பிகள்

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "நேற்று இரவு ராகேஷ் மற்றும் அவருடன் சிலர் மது போதையில் சாலையில் நின்றுள்ளனர். அப்போது போலீஸார் ரோந்து சென்றுள்ளனர். காவலர்களைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். ராகேஷ் அவரது பக்கத்து வீட்டை நோக்கி ஓடினார். வீட்டின் கேட் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கேட்டின் மேல்பகுதி வழியாக கையைப் போட்டு கேட்டை திறக்க முயன்றார்.

அப்போது கேட்டின் மேல்பகுதியில் உள்ள கூர்மையான கம்பி அவரின் சட்டை வழியாக விலாப் பகுதியில் குத்தி உள்ளே புகுந்தது. இதனால் ஏற்பட்ட வலி காரணமாக அவர் அலறினார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் விலாவில் சென்ற கம்பி எலும்புகளுக்கு இடையே ஆழமாகச் சென்றதால் அவரை மீட்க முடியவில்லை. அதன் பின்னர் காவல்துறை, 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர்.

கம்பிகளுடன் மீட்கப்பட்ட ராகேஷ்
கம்பிகளுடன் மீட்கப்பட்ட ராகேஷ்

அனைவரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்புத் துறையினர் அவசரகால மீட்பு ஊர்தியில் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு மீட்பு வீரர்கள் ஹைட்ராலிக் கட்டர் கொண்டு கேட் கம்பியைப் பாதுகாப்பாக அறுத்தனர். பின்னர் அவரது உடலில் குத்தியிருந்த கம்பியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடலிலிருந்து கம்பி அகற்றப்பட்டது. இப்போது எந்த ஆபத்தும் இல்லாமல் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு