பரமத்திவேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் காவிரியாற்றில் ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளை ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக்குமார் (வயது: 29) இவர், கரூர் மாவட்டத்தில் உள்ள புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மகிமா (வயது: 24). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், குடும்பத்தினருடன் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்காக ஜேடர்பாளையம் காவிரியாற்றுக்கு நேற்று சென்றனர். அப்போது, சாமி கும்பிட்ட பிறகு, ஆற்றில் முளைப்பாரி விடுவதற்காக தீபக்குமாரின் சகோதரி, குழந்தையுடன் ஆற்றில் இறங்கினார். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், இருவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். அதையடுத்து, உடனடியாக ஆழமான பகுதியில் சிக்கியவர்களை மீட்பதற்காக தீபக்குமார் தண்ணீரில் இறங்கி அவர்களை உயிருடன் மீட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக தீபக்குமார் ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினார்.

இதனைக்கண்ட அவரது உறவினர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் மீனவர்கள் உதவியுடன் தீபக்குமாரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு தீபக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஜேடர்பாளையம் காவல்துறையினர், தீபக்குமார் சடலத்தை மீட்டு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆடிப்பெருக்கு நாளில் புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அவரின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.