Published:Updated:

கடலில் விழுந்த மிக்-29 கே போர் விமானம்! - மாயமான விமானியைத் தேடும் கடற்படை

மிக்-29 ரக போர் விமானம்
மிக்-29 ரக போர் விமானம்

கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் மிக்-29 கே ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விசாரணையில் பறவை மோதி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1980-ம் ஆண்டிலிருந்து இந்திய விமானப்படையில் இடம் பெற்றுவரும் மிக்-29 ரக போர் விமானம், வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி, எந்தத் திசையிலும் தாக்குதல் நடத்தக்கூடிய திறன், வான், நிலம் மற்றும் கடற்பகுதியிலுள்ள இலக்கையும் தகர்க்கக்கூடிய தொழில்நுட்பம், நவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் வசதி உள்ளிட்டவற்றோடு வடிவமைக்கப்பட்டது. மேலும், இதில் விமானியின் இருக்கைக்கு மேலுள்ள காக்பிட் எனப்படும் கண்ணாடிக் கதவு, டிஜிட்டல் தொடுதிரையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. எதிரிநாட்டு விமானம் இந்திய வான் எல்லைக்குள் புகுந்த ஐந்து நிமிடங்களில் அதைக் கண்டறிந்து அழிக்கும் சக்திபடைத்தது மிக்-29 ரக போர் விமானம்.

மிக் - 29 ரகப் போர் விமானம்
மிக் - 29 ரகப் போர் விமானம்

இந்த விமானங்கள் மூன்று படைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் இரண்டு படைப்பிரிவுகள் ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் செயல்படுகின்றன. இந்திய கடற்படை, கோவாவில் 40 மிக் -29 கே ரக போர் விமானங்களை வைத்திருக்கிறது. இவை அனைத்தும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா விமானம்தாங்கிப் போர்க் கப்பலிலிருந்து இயக்கப்படுகின்றன. கடற்படைக்குச் சொந்தமான இந்த விமானங்களில் ஒன்றுதான் அரபிக் கடலில் விபத்துக்குள்ளானது.

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா விமானம்தாங்கி கப்பலிலிருந்து மிக்-29 கே ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில் இரண்டு விமானிகள் பயணித்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் விமானம் திடீரென அரபிக் கடலில் விழுந்தது. உடனடியாக, இது குறித்துத் தகவலறிந்த இந்திய கடற்படையின் வான், தரைவழிப் படையினர் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்தியக் கடற்படையின் மீட்புப் பணியில், மிக் 29 கே ரக பயிற்சி விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்றொரு விமானியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

346 பேரை பலிவாங்கிய போயிங் விமானம் மீண்டும் பறக்க அனுமதி... எதனால், ஏன், எப்படி கிடைத்தது?!

கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் மிக்-29 கே ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விசாரணையில் பறவை மோதி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. நேற்று, அரபிக் கடலில் விழுந்த மிக்-29 கே ரக விமானத்தைச் சேர்த்து, கடந்த ஓராண்டில் மிக்-29 கே விமானம் விபத்தில் சிக்குவது இது மூன்றாவது முறை. கடந்த இரண்டு முறையும் விமானம் விபத்தைச் சந்தித்தபோது, பாதுகாப்பு சாதனத்தை இயக்கி விமானிகள் உயிர் தப்பினர். இம்முறை, ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு விமானியை இந்தியக் கடற்படையினர் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு