Published:Updated:

இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதிய மயில்! - கேரளாவில் புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம்

விபத்தை ஏற்படுத்திய பிறகு மரணமடைந்த மயில்
விபத்தை ஏற்படுத்திய பிறகு மரணமடைந்த மயில்

பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளையான பிரமோஸ் மீது மயில் மோதிய விபத்தில் அவர் மரணமடைந்த சம்பவம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம், திருச்சூர் புன்னயூர்குளம், பீடிகப்பறம்பைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் பிரமோஸ் (34). திருச்சூர் மாரார் ரோட்டில் ஒரு தனியார் வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்துவந்தார். இவருக்கும் வீணா (26) என்ற பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வீணாவும் தனியார் வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார். இந்தநிலையில் பிரமோஸ் தனது மனைவி வீணாவுடன் பைக்கில் பயணம் செய்திருக்கிறார். அய்யந்தோள் - புழய்க்கல் ரோட்டில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர் தம்பதியர். அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் குறுக்கே ஒரு மயில் பறந்து சென்றிருக்கிறது.

அந்த மயில் திடீரென பைக்கில் சென்ற பிரமோஸின் நெஞ்சில் மோதியது. பைக்கின் வேகமும் சேர்ந்துகொள்ள பிரமோஸ் நிலைதடுமாறினார். இதனால் பைக்கைச் சரியாக ஓட்ட முடியாமல் திணறினார். கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில், மற்றொரு பைக்கில் சென்றுகொண்டிருந்த தனேஷ் (37) என்பவர் மீது மோதியதுடன், அருகிலுள்ள காம்பவுண்ட் சுவரில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான பைக்
விபத்துக்குள்ளான பைக்

பைக்கில் இருந்த பிரமோஸும் வீணாவும் தூக்கிவீசப்பட்டனர். இதில் பிரமோஸ் படுகாயம் அடைந்ததில் அந்த இடத்திலேயே மரணமடைந்தார். பிரமோஸின் மனைவி வீணா படுகாயம் அடைந்தார். பிரமோஸின் பைக் நிலைதடுமாறி மோதியதால் மற்றொரு பைக்கில் சென்ற தனேஷும் படுகாயமடைந்தார். அதோடு பிரமோஸின் மார்பில் மோதிய மயிலும் சம்பவ இடத்திலேயே விழுந்து இறந்தது. விபத்து ஏற்பட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர்.

ஆரணி: கட்டுப்பாட்டை இழந்த கார்; லாரி மோதி விபத்து; கைக்குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்!

படுகாயமடைந்த வீணாவையும் தனேஷையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மரணமடைந்த பிரமோஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. வண்ணம் பூசும் தொழிலாளியான தனேஷ் வேலைக்காக பைக்கில் செல்லும் சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து திருச்சூர் வெஸ்ட் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய பின் மரணமடைந்த மயிலை வனத்துறை அதிகாரி மீட்டுச் செல்கிறார்
விபத்தை ஏற்படுத்திய பின் மரணமடைந்த மயிலை வனத்துறை அதிகாரி மீட்டுச் செல்கிறார்

மரணமடைந்த மயிலின் உடலை வனத்துறை அதிகாரிகள் மீட்டுச் சென்றனர். மயில் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக புதுமாப்பிள்ளை மரணமடைந்த சம்பவம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு