Published:Updated:

கொரோனா கவச உடை; பாதியில் நின்ற லிஃப்ட்! -கேரள செவிலியருக்கு நேர்ந்த சோகம்

செவிலியர்
செவிலியர் ( representational image )

அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர் ஒருவர், கவச உடையுடன் லிஃப்ட் மூலம் அடுத்த தளத்துக்குச் சென்றபோது மின்சாரம் தடைப்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கலமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் ஒருவர், சுமார் ஒன்றரை மணிநேரமாக லிஃப்டுக்குள் சிக்கித் தவித்த சம்பவம் வெளியே தெரிய வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணியாற்றும் அந்தச் செவிலியர், தான் அணிந்திருந்த கொரோனா தடுப்புக் கவச உடையுடன் லிஃப்ட்டுக்குள் சிக்கித் தவித்த போதிலும் உதவிக்கு யாருமே வராத சோகம் நிகழ்ந்திருக்கிறது. அவர் மயக்கமடைந்த பின்னரே உதவி கிடைத்துள்ளது.

`மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

கொரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர், கவச உடையுடன் கையில் எக்கோ கருவியை எடுத்துக்கொண்டு அடுத்த மாடியில் உள்ள கொரோனா நோயாளியைப் பரிசோதிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

representational image
representational image

அரசு மருத்துவமனையில் செவிலியர் சென்ற லிஃப்ட் இயங்காமல் பாதியிலேயே நின்றுவிட்டது. உதவிக்காக அவர் சத்தமிட்ட போதிலும் அலாரம் அடித்தபோதிலும் யாரும் வரவில்லை. அதனால் வெளிச்சம் மற்றும் காற்று இல்லாத லிஃப்டின் உள்ளேயே மயக்கமடைந்து கிடந்துள்ளார். நீண்ட நேரத்துக்குப் பின்னர் சிலர் பார்த்ததால் அவரை மீட்டு சிகிச்சை அளித்துள்ளார்கள்.

`பரிசோதனையில் நெகட்டிவ்; தனிமை வார்டு மனஉளைச்சல்!' -கேரள கொரோனா வார்டில் விபரீத முடிவெடுத்த 2 பேர்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட செவிலியர் கூறுகையில், “நான் கவச உடையுடன் லிஃப்டில் ஏறிச் சென்றபோது மின்சாரம் தடைப்பட்டது. உடனடியாக நான் அவசர உதவிக்கான சுவிட்சை அழுத்தியதால் அலாரம் அடித்தது. அரை மணிநேரம் அடித்தபோதிலும் யாரும் உதவிக்கு வரவில்லை. நான் பணியின்போது செல்போன் வைத்துக் கொள்வதில்லை என்பதால் அவசரத்துக்கு யாரையும் உதவிக்கு அழைக்கவும் முடியவில்லை.

பணியின்போது நான் செல்போன் பயன்படுத்துவதில்லை. அதனால் அதை எடுத்துச் செல்லாததால் யாரையும் உதவிக்கு அழைக்கவும் முடியவில்லை.
பாதிக்கப்பட்ட செவிலியர்

லிஃப்டின் உள்ளே இருட்டாக இருந்தது. கவச உடையுடன் இருந்ததால் காற்று இல்லாமல் வியர்வை வழிந்தது. இதனால், கண்பார்வை மறைந்தது. எக்கோ கருவியும் இருந்ததால் போதுமான இடம் வசதி இல்லை. ஒரு கட்டத்தில் என் கை மற்றும் கால்கள் வலுவிழந்தது போல இருந்தன. அதன்பின்னர் நான் மயங்கி விழுந்துவிட்டேன். அதன்பிறகு நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை” என்கிறார் அச்சத்துடன்.

மதியம் 3.05 மணிக்கு லிஃப்டுக்குள் மயங்கி விழுந்த அந்தச் செவிலியர், மாலை 4.20 மணிக்கே மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் முழுவதும் வலி இருப்பதாக அவர் தெரிவித்ததால் அவருக்கு அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

செவிலியர்
செவிலியர்

லிஃப்டுக்குள் சிக்கித் தவித்த நர்ஸுக்குக் காய்ச்சல் இருந்ததால் அவருக்குக் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, செவிலியர் லிஃப்டுக்குள் சிக்கிய விவரம் தங்களுக்குத் தெரியாததால் அவர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், இனி இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு