Published:Updated:

`பாலம் இருந்திருந்தால் உயிர் போயிருக்காது'- கொள்ளிடம் கரையில் கேட்கும் புலம்பல்கள்!

Kollidam River
Kollidam River

தஞ்சாவூர் பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்திற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த 38 பேர் மீட்கப்பட்ட நிலையில் மாயமான மூன்று பேரை தேடும் பணி இன்று நடைபெற்றது. இதில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்ற இருவரை தேடி வருகின்றனர். இது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பாலம் இல்லாததே இந்த விபத்திற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொள்ளிடம் ஆறு
கொள்ளிடம் ஆறு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பகுதிகளை கடந்து செல்கிறது கொள்ளிடம் ஆறு. இந்தப் பகுதியில் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவில் தீவு போல் மேலராமநல்லூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. மேலும் வீடுகள், விவசாய நிலங்கள் என 405 ஹெக்டேர் பரப்பளவில் ஆற்றுக்குள்ளேயே மேடான பகுதியில் பரந்து விரிந்திருக்கிறது. மேலராமநல்லூர் அரியலூர் மாவட்ட எல்லைக்குள் அமைந்திருந்தாலும் இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் அனைத்து வகையான தேவைகளுக்கும் தஞ்சாவூர் பகுதிக்குத்தான் வந்து செல்கிறார்கள். ஆற்றில் தண்ணீர் வராத வரை இவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் தண்ணீர் வந்து விட்டால் இவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது நீர் வரத்து அதிகமாக இருப்பதால் கல்லணையிலிருந்து தண்ணீர் அதிக அளவில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து மேலராமநல்லூர் ஆற்றுக்கு நடுவே மேடான பகுதியில் இருப்பதால் சுற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் இந்த கிராமத்தில் நேற்று செல்வவிநாயகர், வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் கபிஸ்தலம் பகுதியில் உள்ள குடிக்காடு, வடசருக்கை, கருப்பூர், கோவிந்தநாட்டுச்சேரி, பருத்திக்குடி, நாயக்கர் பேட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.

கொள்ளிடம் ஆறு
கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாகச் செல்வதால் ஆற்றின் நடுவே உள்ள கிராமத்துக்குப் படகு மூலமே சென்றுள்ளனர். இதையடுத்து விழா முடிந்த பிறகு நேற்று மாலை ஒரே படகின் மூலம் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 41 பேர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் நடுவே படகு சென்று கொண்டிருந்த போது சுமை தாங்க முடியாமல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் படகில் இருந்தவர்கள் ஆற்றுக்குள் விழுந்து, பாய்ந்து வந்த தண்ணீரை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படகில் வந்த நீச்சல் தெரிந்த நபர்கள் தண்ணீரில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றி அருகில் உள்ள மணல் திட்டுகளுக்கு கொண்டு சென்று விட்டனர். மேலும் இந்தத் தகவல் அறிந்த உடனே மேலராமநல்லூர் மற்றும் வடசருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொப்பரை மூலம் கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்று ஆபத்தில் இருந்தவர்களை மீட்டனர். மொத்தம் 38 பேர் மீட்கப்பட்ட நிலையில் மூன்று பேரை மட்டும் காணவில்லை. அவர்களை தேடும் பணி இன்று நடைபெற்றது. இதில் ராணி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுயம்பிரகாஷம், பழனிசாமி ஆகியோரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர் துரைகண்ணு
அமைச்சர் துரைகண்ணு

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``எங்க ஊரில் சுமார் 300 வீடுகள் உள்ளன. 1,500 வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆற்றுக்குள்ளேயே மேடான பகுதியில் எங்க ஊர் அமைந்துள்ளது. இங்குதான் ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். விவசாயம்தான் எங்களோட முக்கிய தொழில். கரும்பு, காய்கறி, நெல் போன்றவற்றை விளைவிப்பதுடன் அவற்றை கும்பகோணம் பகுதிகளில் கொண்டு விற்பனை செய்கிறோம்.

இதனால் எங்க ஊரை தஞ்சாவூருடன் இணைக்கும் வகையில் பாலம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து பல ஆண்டுகளாகப் போராடினோம். கடந்த ஆண்டு புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பாலம் கட்டும் பணி தொடங்கவே இல்லை. ஆற்றில் தண்ணீர் வராத வரை எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தண்ணீர் வந்தால் நாங்க படாத துயரத்திற்கு அளவே இருக்காது.

மேலராமநல்லூர்
மேலராமநல்லூர்

தற்போது ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. எங்க ஊரில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். விழா முடிந்து திரும்பிய போது படகு கவிழ்ந்தது. இந்தப் பெரும் ஆபத்திலிருந்து 38 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

விழா முடிந்து சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருந்து விட்டு வீடு திரும்பியவர்கள் இப்படி துயரத்தில் சிக்குவார்கள் எனத் தெரியவில்லை. எந்த சாமி செய்த புண்ணியமோ தெரியவில்லை பலர் மீட்கப்பட்டு விட்டனர். ராணி என்பவர் இறந்து விட மற்ற இரண்டு பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. பாலம் கட்டியிருந்தால் நாங்க படகில் பயணம் செய்திருக்கப் போவதில்லை. பாலம் இல்லாததுதான் இந்த விபத்திற்குக் காரணம்.

மேலராமநல்லூர்
மேலராமநல்லூர்

போன வருடம் கொள்ளிடத்தில் தண்ணீர் கரை புரள ஓடியது. இதனால் எங்க வாழ்க்கையே முடங்கிப் போச்சு. இதே போல் இந்த வருடமும் தண்ணீர் வந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்குள் பாலம் கட்டும் பணியைத் தொடங்கி முடியுங்கள் எனப் பல மாதமாகவே கூறிக் கொண்டிருந்தோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை இப்போது நாங்கள் தவித்துக்கொண்டிருக்கிறோம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு