கரூர்: பழநி பாதயாத்திரை சென்றவர் உயிரிழப்பு - லாரியால் பக்தர்களுக்கு நேர்ந்த துயரம்!

மோகனூர் அரசு மருத்துவமனை அருகேயுள்ள முத்துராஜா தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன், கார்த்திகேயன் (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.
பழநிக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர்கள்மீது லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், பக்தர்களில் ஒருவர் பலியானதோடு, நான்கு பக்தர்கள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தைப்பூசம் திருவிழாவையொட்டி, திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக, பழநிக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அரசு மருத்துவமனை முத்துராஜா தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வோர் ஆண்டும் பழநிக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை 6 மணிக்கு மோகனூர் பகுதியிலிருந்து பழனியை நோக்கி பாதயாத்திரையாகச் சென்றுகொண்டிருந்தனர்.

பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக டாடா ஏசி வாகனமொன்றில் உணவுப்பொருள்கள் ஏற்றிவருவது வழக்கம். அந்த வகையில், கரூர் காக்காவாடி அருகேயுள்ள வேலம்மாள் பள்ளி அருகே சாலையோரமாக டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி, பக்தர்களுக்கு பிஸ்கட்கள் வழங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, ஓசூரிலிருந்து மதுரை நோக்கி வந்த சரக்கு லாரி ஒன்று பின்புறமாக டாட்டா ஏசி வாகனம் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இந்தச் சம்பவத்தில், மோகனூர் அரசு மருத்துவமனை அருகேயுள்ள முத்துராஜா தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன், கார்த்திகேயன் (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். மேலும், இந்த விபத்தில் நான்கு பக்தர்கள் படுகாயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள், விபத்தில் படுகாயமடைந்த அந்த நான்கு பேரையும் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து, வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.