சீர்காழி : டூவிலரில் ஆடு திருடி வந்தபோது விபத்து! - ஒருவர் பலி; இருவர் படுகாயம்

சீர்காழி அருகே டூவிலரில் ஆடு திருடிவிட்டு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
சீர்காழி அருகேயுள்ள கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் ஆட்டைத் திருடிக்கொண்டு மூவர் வந்த போது வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). எலக்ட்ரீஷியன். இவர், நண்பர்கள் பாண்டித்துரை (வயது 25), அரவிந்த் (வயது 19) ஆகிய இருவருடன் சேர்ந்து அருகில் உள்ள மீனவக் கிராமங்களில் இரவு நேரத்தில் ஆடுகளைத் திருடி, விற்பனை செய்து வந்துள்ளார். தொடர்ந்து ஆடுகள் திருட்டுப் போவதை தடுக்கக் கிராம மக்கள் குழு அமைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் ஓலைக்கொட்டாயமேடு கிராமத்தில் ஒரு ஆட்டைத் திருடிக்கொண்டு சுரேஷ் உள்ளிட் ட மூவரும் ஒரே டூவீலரில் வந்துள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களை விரட்டியுள்ளனர். தப்பிப்பதற்காக திருடர்கள் மூவரும் டூவீலரில் அதிவேகமாக வந்துள்ளனர். அப்போது, நிலைதடுமாறி டூவீலர் கூழையார் கிராமத்தில் சாலையோரம் உள்ள புங்க மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தூக்கி வீசப்பட்ட ஆடு அதே இடத்தில் துடிதுடித்து இறந்தது. படுகாயம் அடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஒரு ஆட்டோவில் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆட்டோவில் சென்ற அவர்கள் மூவரும் மருத்துவமனைக்குப் போகாமல் வீடுகளுக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய சுரேஷை அவரது வீட்டில் இறக்கிவிட்ட மற்ற இருவரும், ஆடு திருடியதை மறைத்து டூவீலர் விபத்து எனக் கூறி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் இறக்கி விடப்பட்ட சுரேஷ், சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷுக்கு, ரேணுகா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுரேஷ் உடலைக் கைப்பற்றினர். பின்னர், அதை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.