ஆவடி அருகில் உள்ள பருத்திப்பட்டு நிரஞ்சன் நகரில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில், அதே பகுதியைச் சேர்ந்த முத்து (26) என்பவரும், குணசேகரன் (35) என்பவரும் ஈடுபட்டிருந்தனர். சுத்தம் செய்வதற்காக முத்து தொட்டியின் உள்ளே இறங்கினார். அப்போது, விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குணசேகரன், முத்துவைக் காப்பாற்ற உள்ளே இறங்கினார். ஆனால், அவரும் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். அதையடுத்து, குடியிருப்பு வாசிகள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருவரையும் மீட்டனர். இதில் முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த குணசேகரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து வந்த ஆவடி பகுதி காவல்துறையினர் முத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.