Election bannerElection banner
Published:Updated:

ஊட்டி: மாயமான விங் கமாண்டர்; சேற்றில் சிக்கிய சோகம்! - துயரத்தில் முடிந்த சுற்றுலா

விங் கமாண்டர் துர்லாப்
விங் கமாண்டர் துர்லாப்

கரையிலிருந்த கமாண்டர் துர்லாப் திடீரென தண்ணீருக்குள் மாயமாகியிருக்கிறார். இதைப் பார்த்த துர்லாப்பின் மனைவி அனுராதா சத்தமிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலம், தேஸ்புர் பகுதியைச் சேர்ந்தவர் துர்லாப் பட்டாச்சாரியா. 37 வயதான இவர் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரி மையத்தில் விங் கமாண்டராகப் பொறுப்பு வகித்துவருகிறார். மனைவி அனுராதா, இரண்டு குழந்தைகளுடன் வசித்துவரும் இவர், வார விடுமுறை நாள்களில் பிக்னிக் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.

துர்லாப்
துர்லாப்

ஊட்டி அருகிலுள்ள எமரால்டு அணைக்குக் குடும்பத்துடன் செல்லத் திட்டமிட்டிருந்த இவர், விடுமுறை நாளான நேற்று சக விங் கமாண்டர்களையும் குடும்பத்துடன் வரவழைத்து எமரால்டு அணைக்குச் சென்றிருக்கிறா. அங்கு கரையோரத்தில் விளையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஒரு சிலர் தண்ணீரில் இறங்கி விளையாடியதாகவும் கூறப்படுகிறது.

கரையில் இருந்த கமாண்டர் துர்லாப் திடீரென தண்ணீருக்குள் மாயமாகியிருக்கிறார். இதைப் பார்த்த துர்லாப்பின் மனைவி அனுராதா சத்தமிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். இதை அறிந்த உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கும் மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்துக்கு வந்த எமரால்டு போலீஸார் அணையில் இறங்கித் தேடியும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மணி நேரத் தேடலுக்குப் பின்னர், அவரைச் சடலமாகவே மீட்க முடிந்தது. இது குறித்து எமரால்டு போலீஸார் கூறுகையில்,``எங்களுக்குத் தகவல் கிடைத்த உடனே இங்கு வந்துவிட்டோம். விங் கமாண்டரை உயிருடன் மீட்கலாம் என்ற நம்பிக்கையில், காவலர் அஜித் அணையில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டார். இருந்தும் சடலமாகவே மீட்க முடிந்தது. ஊட்டி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவைத்திருக்கிறோம்’’ என்றனர்.

விங் கமாண்டர் துர்லாப்
விங் கமாண்டர் துர்லாப்

துர்லாப்பின் மனைவி அனுராதா, ``எங்களுடன் வந்திருந்த சக நண்பரின் குழந்தை தண்ணீருக்குள் இறங்கியது. குழந்தையைக் காப்பாற்ற ஓடிய இவர் அணையில் தவறி விழுந்தார். மேலே வரவேயில்லை. சேற்றில் சிக்கிக்கொண்டார்" என கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு