Published:Updated:

புதுக்கோட்டை: வெடித்துச் சிதறிய வெடிபொருள்கள் குடோன்!- 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

வெடிபொருள்கள் குடோன் விபத்து
வெடிபொருள்கள் குடோன் விபத்து

குடோனிலிருந்த வெடிபொருள்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், குடோனைச் சுற்றியிருந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், திருயமயம் அருகே கீழநிலைக்கோட்டையில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வாணம், அவுட், தோரண வெடி உள்ளிட்ட வெடிபொருள்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டுவந்தது. கடந்த 2017-ல் இந்த குடோனில் நடைபெற்ற பெரிய விபத்தில் அங்கு பணியிலிருந்த ஒரு ஆண், நான்கு பெண்கள் என ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, பாதுகாப்பின்றி செயல்பட்டுவந்த வெடிபொருள்கள் தயாரிக்கும் அந்த நிறுவனத்தின் உரிமத்தை மாவட்ட நிர்வாகம் ரத்துசெய்தது.

சேதமடைந்த வீடுகள்
சேதமடைந்த வீடுகள்

ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களுடன் வாணப் பட்டறையும் இழுத்து மூடப்பட்டது. தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் வேளையில், குணசேகரனின் மகன்களான விக்னேஷ், அண்ணாமலை, வீரப்பன், விஜய் ஆகியோர் பாதுகாப்புடன் மீண்டும் வாணப் பட்டறையை இயக்க அனுமதி கோரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் நேற்றிரவு அந்த குடோனிலிருந்த வெடிபொருள்கள் அனைத்தும் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில், குடோனைச் சுற்றியிருந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன.

Vikatan

விபத்தின்போது பணியாளர்கள் யாருமில்லாததால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. வீடுகள் சேதமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர்கள், குடோன் உரிமையாளர்களின் வீட்டை முற்றுகையிட்டு, கார் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கே.புதுப்பட்டி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, வாணப் பட்டறை உரிமையாளர்களான விக்னேஷ், அண்ணாமலை, வீரப்பன் ,விஜய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முற்றுகையிட்ட மக்கள்
முற்றுகையிட்ட மக்கள்

சேதமடைந்த வீடுகளை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். ஏற்கெனவே அந்த குடோனிலுள்ள கிணற்றுக்குள் புதைக்கப்பட்ட வெடிபொருள்களுக்கு மேல் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகள் வைக்கப்பட்டதன் விளைவாகவே வெடி விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து, இது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு