தூத்துக்குடி: லோடு ஆட்டோவில் பயணித்த 36 பேர்! - 5 பேரை பலிகொண்ட விபத்துக்கு என்ன காரணம்?

விவசாயப் பணிக்குச் செல்வதற்காக லோடு ஆட்டோவில் ஒரே நேரத்தில் 36 பேர் பயணம் செய்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஓடையில் உருண்டு விபத்து ஏற்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டம், மணப்படை மற்றும் மணல்காடு கிராமத்தைச் சேர்ந்த 36 விவசாயக்கூலித் தொழிலாளிகள் ஓட்டப்பிடாரம் அருகே சவரிமங்கலம் கிராமத்துக்கு விவசாயப் பணிக்காக லோடு ஆட்டோவில் பயணம் செய்தார்கள்.

அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து காய்த்துக் குலுங்குவதால், உளுந்து பறிப்பதற்காக லோடு ஆட்டோவான டாடா ஏஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அந்த வாகனத்தை திருமலை கொழுந்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரை என்பவர் ஓட்டியிருக்கிறார்.
வாகனத்தில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பயணம் செய்த நிலையில், அந்த வாகனம் மணியாச்சி அருகே வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. வாகனத்தை ஓரமாக நிறுத்த டிரைவர் முயன்றபோது நிலைதடுமாறி அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

லோடு ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்கள் இருந்ததால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தார்கள். சிலர் வாகனத்தின் அடியில் சிக்கினார்கள். அதனால் விபத்து நடந்த இடத்திலேயே பேச்சியம்மாள், மலையரசி, கோமதி, ஈஸ்வரி, மற்றொரு பேச்சியம்மாள் ஆகிய ஐந்து பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
வாகனத்தில் இருந்த மற்றவர்கள் காயமடைந்தனர். அவர்களில் லேசான காயம் அடைந்த ஆறு பேர் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 24 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்தில் சிக்கி இறந்த ஐந்து பேரின் உடல்களும் மணியாச்சியிலிருந்து உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவருபவர்களை தி.மு.க-வைச் சேர்ந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில், சாலை விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றியதே விபத்து ஏற்பட்டதற்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இருப்பினும், டிரைவர் சித்திரை என்பவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகிறார்கள்.