Published:Updated:

`இரக்கமில்லா புயல்.. தங்கையை தவிக்கவிட்ட அண்ணன்கள்!'- `கஜா'வால் கதிகலங்கும் குடும்பம்

கடந்த வருடம் வீசிய கஜா புயலில் பட்டுக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்தனர். அந்தச் சம்பவத்தை மறக்க முடியாமல் அவர்களின் பெற்றோர் தவித்து வருவது வேதனையைத் தருவதாக உள்ளது.

மனைவியுடன் வேல்முருகன்
மனைவியுடன் வேல்முருகன்

கடந்த வருடம் நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் மறக்க முடியாத பல சுவடுகளைப் பதித்துச் சென்றிருக்கிறது. புயலின் கோர பசிக்கு மனிதர்கள், கால்நடைகள், மரங்கள் என யாரும் தப்பவில்லை. எல்லோர் மனதிலும் வலி ஏற்படுத்திய புயல் வீசி ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. ஆனால், இன்னும் வலி தீரவில்லை. பெரும் முயற்சிக்குப் பிறகு, மீண்டு வருவோம் எனப் போராடி கஜா ஏற்படுத்திய இழப்புகளைச் சரி செய்துகொண்டிருக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் அந்த இரவை எங்களால் மறக்க முடியவில்லை என எப்போதும் கண்ணீர்விட்டு கொண்டிருக்கிறது பட்டுக்கோட்டை சிவக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் குடும்பம்.

உயிரிழந்த நான்கு பேர்
உயிரிழந்த நான்கு பேர்

வேல்முருகனிடம் பேசினோம், ``எனக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். எனக்கு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இதயப் பிரச்னை காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டு செயற்கை குழாய் பொறுத்தப்பட்டது. அதனால் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னோட மூன்று மகன்களின் உழைப்புதான் எங்க வீட்டோட வருமானமாகவும் இருந்தது அடுப்பு எரிவதற்கு காரணமாகவும் இருந்தது.

என் மகன்களுக்கு தங்கச்சின்னா அவ்வளவு உசிரு. அவளைக் கண்ணுக்குள்ள வச்சு தாங்குவார்கள் மூன்று பேரும். அண்ணே எனக்கு இந்தப் பொருள் வேண்டும் என எதைக் கேட்டாலும் உடனே வண்டியில உட்காரவைத்து நேராக அழைத்துச் சென்று வாங்கிக் கொடுப்பார்கள். தங்கச்சிதான் அவன்களுக்கு உலகமே. அண்ணன்கள்தான் என் பொண்ணுக்கு உலகமே. தங்கச்சியா நல்லா படிக்க வைக்க வேண்டும், அதோடு இந்தக் கூரை வீட்டுக்குப் பதிலாக வேறு வீடு கட்ட வேண்டும். அதன் பிறகு தங்கச்சியை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

மனைவியுடன் வேல்முருகன்
மனைவியுடன் வேல்முருகன்

போதுமான வருமானம், நிறைந்த சந்தோஷமுமாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், கடந்த வருடம் வீசிய கஜா புயல் இந்தக் கனவுகளிலும் எங்க சந்தோஷத்திலும் மண்ணை அள்ளிப் போட்டதுடன் நீங்கா ரணத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுக்க கண்ணீர் சிந்தச் செய்துவிட்டு சென்றுவிட்டது. அன்று... கும்மிருட்டு கடும் மழை பெரும் சத்தத்துடன் காற்று வீசிக்கொண்டிருந்தது. மழையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு காற்று அதிவேகமாக வீசிக்கொண்டிருந்தன.

அருகில் இருந்த மரங்கள் காற்றுடன் மல்லுக்கட்ட சக்தி இல்லாமல் கீழே விழத் தொடங்கின. கரன்ட் இல்லை வெளியே என்ன நடக்குதுன்னே தெரியலை. இதில் பயந்த நாங்கள் வீட்டின் பின்பகுதியில் சுவர் திடமாக இருக்கும். அதனால் அங்கு சென்று இருப்போம் என நான், என் மனைவி, மகன்கள், மகள், என் மனைவியின் தங்கை மகன் என 7 பேரும் படுத்திருந்தோம்.

மனைவியுடன் வேல்முருகன்
மனைவியுடன் வேல்முருகன்

அப்போது திடீரென வீட்டின் மேல் கூரையில் மரம் ஒன்று விழுந்ததில் சுவர் இடிந்து படுத்துக்கிடந்த எங்கள் அனைவர் மீதும் விழுந்தது. என் மனைவி மட்டும் உடம்பில் காயங்களுடன் என்னங்க என்ன ஆச்சு என்றாள். இளைய மகன் மட்டும் அப்பா காப்பத்துப்பா என்றான், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு என் மகன்களின் சத்தம் எதுவுமே கேட்கவில்லை.

அவன்களுக்கு என்ன ஆச்சோ என என் மனதில் பதைபதைப்பு ஏற்பட்டது. வீடு முழுக்க சுவர்கள் இடிந்து கிடந்தன. ராசா எந்திரிங்கடா எனக் கத்திக்கொண்டே இருந்தோம் நானும் என் மனைவியும். என் மகளுக்கு லேசான காயத்துடன் அவள் அண்ணா எந்திரிங்க எனச் சத்தமாக அலறிக்கொண்டிருந்தாள்.

எங்க அலறல் சத்தம் கேட்டு அக்கம் பகத்தினர் ஓடி வந்து எங்களை மீட்டனர். இடிபாடுகளுக்கு இடையில் இருந்த என் மகன்களுடன் சேர்த்து நான்கு பேரையும் மீட்கும்போது எந்த அசைவும் இல்லை. இது மயக்கமாக இருக்க வேண்டும் என நான் வேண்டாத சாமி இல்லை.

மனைவியுடன் வேல்முருகன்
மனைவியுடன் வேல்முருகன்

ஆனால், ஒரு சாமிகூட என் வேண்டுதலை உண்மையாக்கவில்லை. சாலையில் சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறபடுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் 4 பேரையும் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

ஆனால், 4 பேருமே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வாய்விட்டு அழக்கூட யாருக்கும் உடலில் சக்தியில்லை. காற்று வீசும்போது மற்றொரு சிறிய வீட்டில் இருந்த 75 வயதான என் அம்மா இந்தக் காற்றுக்கு கொஞ்சம்கூட இரக்கமில்லையா இப்படி என் பேரப்புள்ளைங்க 4 பேரையும் ஒரே நேரத்தில் காவு வாங்கிவிட்டுச் சென்றுவிட்டதே எனக் கதறிக்கொண்டே இருந்ததில் அவருக்கும் முடியாமல்போனது.

அதன் பிறகு எல்லோரும் காட்டிய அன்பும் ஆதரவும் எங்களைக் கொஞ்ச கொஞ்சமாகத் தேற்றிக்கொள்வதற்குக் காரணமாக அமைந்தது. அரசு ஒரு மகனுக்கு 10 லட்சம் என மொத்தம் 30 லட்சம் நிவாரணம் தந்தது. மகன்களே போய்விட்டார்கள் பணம் வந்து என்ன செய்யப்போகுதுன்னு நினைக்கும்போது என் மகள் எங்க முன்னாடி வந்தாள். அவளுக்காக வாழ வேண்டும் என முடிவு செய்து 4 பேரின் மூச்சுக்காற்று அடங்கியிருக்கும் அதே இடத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் கொண்டு வேறு வீடு கட்டினோம்.

உயிரிழந்த சகோதரர்கள்
உயிரிழந்த சகோதரர்கள்

பேரன்களை இழந்த சோகத்திலேயே என் அம்மாவும் போய் சேர்ந்துவிட்டார். நாள்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும், அந்த இரவை எங்களால் மறக்க முடியவில்லை. அண்ணன்கள் ஆசைப்பட்டபடி என் மகளும் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து முடிக்கப்போகிறாள். அரசுப் பணம் கொடுத்தபோதே என் மகள் படிப்பு முடித்ததும் ஒரு அரசு வேலை மட்டும் கொடுங்க. என்னால வேலை செஞ்சி அவளைக் காப்பாற்ற முடியாது. அந்த வேலையை வைத்து அவள் பொழைச்சுக்குவா என்றேன். என் மகள் நிம்மதியா இருந்தால்தான் என் மகன்களின் ஆத்மா சாந்தியடையும்" எனக் கண்கலங்கியபடி தெரிவித்தனர்.