Published:Updated:

`அசுர வேகத்தில் அரசுப் பேருந்து... கட்டுப்பாட்டை இழந்த லாரி!' - பரோட்டா மாஸ்டருக்கு நேர்ந்த துயரம்

சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வரும் நிலையில் நிறைய கடைகள் அப்புறப்படுத்தாமல் உள்ளன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்டடங்களை அனுமதிக்க வேண்டும்.

பரோட்டா மாஸ்டர் உயிரிழப்பு
பரோட்டா மாஸ்டர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசுப் பேருந்து மோதியதில் நிலைதடுமாறிய லாரி சாலையோரத்தில் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது. லாரி மோதி சுவர் இடிந்ததில் பரோட்டா மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரியும் அரசுப் பேருந்தும் போட்டி போட்டுக்கொண்டு சென்றதே இதற்குக் காரணம் என அப்பகுதியினர் கொந்தளிக்கிறார்கள்.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள ஹுண்டாய் கார் தொழிற்சாலை அருகே காரைக்குடி செட்டிநாடு உணவகம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் இந்த ஹோட்டலை நடத்தி வருகிறார். அதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அர்பன் ஷா என்பவர் பரோட்டா மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். வழக்கம்போல இன்று அவர் பரோட்டா தயாரிப்பதற்கான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது சென்னையிலிருந்து வேலூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இடதுபுறம் வந்த லாரிமீது உரசியது. இதனால் நிலை தடுமாறிய லாரி கட்டுப்பாட்டை இழந்து அந்த ஹோட்டலுக்குள் புகுந்தது. லாரி மோதியதில் சுவர் இடிந்து பரோட்டா மாஸ்டர் அர்பன் ஷா மீது விழுந்தது. அருகில் இருந்த மின்கம்பத்தின் மீதும் லாரி மோதியதால் மின்கம்பி அறுந்து பரோட்டா மாஸ்டர் மீது விழுந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்பட்ட ஹோட்டல்
விபத்து ஏற்பட்ட ஹோட்டல்

அப்பகுதியில் விபத்தை நேரில் கண்டவர்களோ “வேகமாகச் சென்ற லாரியை முந்திச் சென்ற அரசுப் பேருந்தால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல விபத்து ஏற்பட்ட உடனே லாரி டிரைவர் லாரியிலிருந்து குதித்து தப்பியோடிவிட்டார். அரசுப் பேருந்து டிரைவர்கள் பேருந்தில் இருக்கும் பயணிகள் மீது அக்கரை கொண்டவர்களாக இருக்க வேண்டும். தனியார் பேருந்துகளைப்போல அதிவேகமாக வாகனங்களை முந்திச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

இப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலையோரக் கடைகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வரும் நிலையில் நிறைய கடைகள் அப்புறப்படுத்தாமல் உள்ளன. இது போன்ற கடைகளை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைத்தால் மட்டுமே இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முடியும்“ என்கிறார்கள்.