Published:Updated:

மகளுக்குத் திருமண ஏற்பாடு; வெளிநாட்டில் கணவர்! -வலது கையை இழந்த தூய்மைப் பணியாளர்

தூய்மைp பணியாளர் ரேவதி
தூய்மைp பணியாளர் ரேவதி

பணியிலிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர், தனது வலது கையை அதுவும் பணியிலிருக்கும்போது இழந்திருக்கிறார் இதுவரை அரசு சார்பில் எந்த உதவியும் செய்யப்படவில்லை.

பட்டுக்கோட்டை நகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை செய்து கொண்டிருந்தபோது அந்த இயந்திரத்தில் சிக்கி வலது கையை இழந்துவிட்டார். மகளுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்து வந்த நிலையில் அந்தப் பெண்ணின் கை துண்டாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை நகராட்சி
பட்டுக்கோட்டை நகராட்சி

பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருபவர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரேவதி (45). இவருடைய கணவர் செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எடுத்துவரப்படும் குப்பைகளை நகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் உள்ள இயந்திரத்தில் வைத்து பிரிக்கப்படுவது வழக்கம்.

`கூட்டி கூட்டி ஓடா தேஞ்சேன்... 18 மாசம் சம்பளம் வரலை” - பிரதமருக்கு தூய்மைப் பணியாளர் கடிதம்

இந்த நிலையில், குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் வழக்கம்போல் ரேவதி ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ரேவதியின் வலது கை இயந்திரத்தில் சிக்கியது. இதையடுத்து, அலறித் துடித்த அவரை நகராட்சி ஊழியர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரும் மாதம் ரேவதியின் மூத்த மகளுக்குத் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் கை துண்டானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை தரம் பிரிக்கும் மையம்
குப்பை தரம் பிரிக்கும் மையம்

இதுகுறித்து சமூக ஆர்வலரான சதா.சிவக்குமார் பேசுகையில், `` பட்டுக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணிகளைச் செய்வதற்கான பணியாளர்கள் பற்றாக்குறை பெருமளவில் உள்ளது. இதனால் பணியில் இருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. கடந்த 18-ம் தேதி மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை செய்துகொண்டிருந்த போது பணிச்சுமையின் காரணமாக எதிர்பாராதவிதமாக ரேவதி என்பவரின் வலது கை இயந்திரத்தில் சிக்கித் துண்டாகிவிட்டது.

இதுவரை அரசு சார்பில் எந்த ஓர் உதவியும் அவருக்குச் செய்யவில்லை. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரான சி.வி சேகர் தொகுதியில்தான் இருக்கிறார். மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் வந்து பாதிக்கப்பட்டவரை பார்க்கவும் இல்லை. இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் இல்லை.

தூய்மைப் பணியாளர்களுடன் சதா.சிவக்குமார்
தூய்மைப் பணியாளர்களுடன் சதா.சிவக்குமார்

வெளிநாட்டில் உள்ள அவரின் கணவர் கொரோனா பிரச்னையால் ஊருக்கு வரமுடியவில்லை. திருமண வேலைகளை ஒற்றை ஆளாக இருந்து ரேவதி கவனித்து வந்தார். இந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கை துண்டான பகுதியை மீண்டும் ஒட்ட வைப்பது சிரமம் எனக் கூறுகிறார்கள். உயரிய சிகிச்சை கொடுத்தால் மட்டுமே துண்டான கையை இணைக்க முடியும். எனவே, ரேவதிக்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன் உயர் சிகிச்சையளிப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.

இதேபோல் தூய்மைப் பணியாளர்கள் அபாயகரமான பணிகளைச் செய்து வருகின்றனர். எனவே, அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.

சிகிச்சையில் ரேவதி
சிகிச்சையில் ரேவதி

இதுகுறித்து, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பையாவிடம் பேசினோம். `` தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தவர் ரேவதி. கை துண்டான செய்தி அறிந்த உடனேயே நான் 25,000 ரூபாய் மற்றும் சிலர் கொடுத்த தொகையும் சேர்த்து மொத்தம் 50,000 ரூபாய் கொடுத்தேன்.

அவரின் மகள்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்தால் நன்றாக இருக்கும் எனச் சொன்னார்கள். அதற்கும் ஏற்பாடு செய்து வருகிறேன். மீண்டும் ஒரு தொகையைக் கொடுக்க உள்ளேன். எல்லாவிதத்திலும் அந்த குடும்பத்துக்குப் பக்கபலமாக இருந்து வேண்டிய உதவிகளை செய்வேன்" என்றார் உறுதியாக.

`கைப்பிடி இல்லாத வாளி!' - தூய்மைப் பணியாளரின் கண்ணீர்க் கதை #MyVikatan
அடுத்த கட்டுரைக்கு