Published:Updated:

பெட்ரோல் ஊற்றிப் பற்றவைக்கப்பட்ட ஜோதி! - விளையாட்டு விழாவில் ப்ளஸ் 2 மாணவருக்கு நேர்ந்த துயரம்

உயிரிழந்த மாணவர் விக்னேஷ்
உயிரிழந்த மாணவர் விக்னேஷ்

செங்கல்பட்டு அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில் ஜோதியை எடுத்துச்சென்ற மாணவன் தீப்பற்றி உயிரிழந்துள்ளார். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அப்பள்ளிக்கு மூன்று நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில், அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், கடந்த 30-ம் தேதி விளையாட்டு விழா நடந்தது. இதன் தொடக்கவிழாவின்போது, 12-ம் வகுப்பு படித்து வந்த விக்னேஷ் என்ற மாணவன், கையில் விளையாட்டு ஜோதியை எடுத்துக்கொண்டு ஓடினார். அப்போது, வேறொரு மாணவனிடம் அதை கொடுக்கும்போது, தவறுதலாக அந்த ஜோதி மாணவன் மீது விழுந்தது. ஜோதி மேலே விழுந்ததும் அதிலிருந்த தீ, விக்னேஷ் உடலில் வேகமாகப் பரவியது. அங்கிருந்த ஆசிரியர்கள், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அந்த மாணவனைக் கொண்டுசென்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளி
அரசு உதவி பெறும் பள்ளி

பிறகு, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரின் உடல் செங்கல்பட்டு கொண்டுவரப்பட்டது. எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருளைப் பயன்படுத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக இறந்த மாணவரின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். உறவினர்களின் கொந்தளிப்பால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

“விளையாட்டு ஜோதியை எடுத்துக்கொண்டு ஓடும்போது, காற்று வேகமாக வீசிய காரணத்தால் அந்த ஜோதி அணைந்துள்ளது. அதை பெட்ரோல் ஊற்றி பற்றவைத்திருக்கிறார்கள். அதனால் அதிலிருந்த நெருப்பு மாணவன்மீது தெறித்துத் தீப்பிடித்துள்ளது. அங்கிருந்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், மாணவரின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்” எனக் கண்ணீர் வடிக்கின்றனர் மாணவரின் உறவினர்கள்.

பின் செல்ல