கர்நாடகா: சிவமோகாவை அதிரவைத்த கல்குவாரி வெடி விபத்து; 6 பேர் பலி! இருவரைக் கைதுசெய்த போலீஸ்

கர்நாடக மாநில முதலைச்சரின் சொந்த ஊரான சிவமோகாவில், அவரது வீட்டிலும் இந்தச் சத்தம் உணரப்பட்டிருக்க்கிறது.
கர்நாடக மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் கடந்த 21-ம் தேதி இரவு சுமார் 10:20 அளவில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டுவெடிப்பின் அதிர்வு பூகம்பம்போல் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதிர்வு, அருகிலுள்ள மாவட்டங்களான சிக்மங்களூர், தேவனகிரி மாவட்டங்களிலும் உணரப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநில முதலைச்சரின் சொந்த ஊரான சிவமோகாவில் அவரது வீட்டிலும் இந்தச் சத்தம் உணரப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கல்குவாரிக்கு கொண்டு சென்ற டைனமைட் வழியிலேயே வெடித்துச் சிதறியது தெரியவந்திருக்கிறது. இதில் வண்டியில் பயணம் செய்த ஆறு பேர் உடல் சிதறி இறந்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகிலுள்ள கட்டடங்கள், ஜன்னல் கதவுகள் போன்றவை கடுமையாகச் சேதமடைந்தன. பல வீடுகள், சாலைகளில்கூட குண்டு வெடிப்பின் காரணமாக விரிசல்கள் உருவாகியிருக்கின்றன.
குண்டு வெடிப்பை பூகம்பம் என்று நினைத்த மக்கள் உடனடியாக புவியியலாளர்களிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தவொரு கண்காணிப்பகத்திலும் நிலநடுக்கம் பதிவாகவில்லை என்று விளக்கமளித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில், `சிவமோகாவில் நிகழ்ந்த சம்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்' என்று பதிவிட்டிருக்கிறார்.

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா கூறுகையில், ``இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ட்வீட் செய்திருக்கிறார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
``ஒரு பெரிய அளவிலான டைனமைட் வெடித்ததுபோல் தெரிகிறது; குவாரி உரிமையாளர் மற்றும் ஆபரேட்டர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்திருக்கிறது. குவாரி உரிமையாளர் மற்றும் டைனமைட் சப்ளையரை போலீஸார் ஏற்கெனவே கைதுசெய்திருக்கிறார்கள். விசாரணை நடந்துவருகிறது” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.