Published:Updated:

திருமணத்துக்கு 4 நாள்களே உள்ளன! - மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற காவலருக்கு நேர்ந்த துயரம்

வரும் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற காவலர் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காவலர் ராஜீவ் காந்தி
காவலர் ராஜீவ் காந்தி

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் ஏரியான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (29). இவர், வேலூர் மாவட்ட மணல் கடத்தல் தடுப்புப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்துவந்தார். ஓராண்டுக்கு முன்பு இவரின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். தாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

திருமண ஏற்பாடுகள்
திருமண ஏற்பாடுகள்

இரண்டு அண்ணன்களின் அரவணைப்பில் இருந்த ராஜீவ் காந்திக்கு சமீபத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். வரும் டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுத்துவந்தனர். திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்றுவந்தன. 

சொத்துத் தகராறில் விழுப்புரம் தி.மு.க பிரமுகர் கொலை! -10 மணிநேரத்தில் கொலையாளிகளை வளைத்த போலீஸ்

இந்தநிலையில், கடந்த 17-ம் தேதி இரவு மணல் கடத்தலைத் தடுக்க சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் ராஜீவ் காந்தி உட்பட சில காவலர்கள் காரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காட்பாடியிலிருந்து லத்தேரி நோக்கிச் சென்றபோது கரசமங்கலம் கூட்ரோடு எதிரில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிவந்த லாரி கார் மீது மோதியது.

விபத்து
விபத்து

இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, காவலர்கள் ராஜீவ்காந்தி, சுரேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜீவ் காந்தி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

ஹெல்மெட் அணிந்தும் பயனில்லை! - முதல்வர் பாதுகாப்புக்குச் சென்ற காவலருக்கு நேர்ந்த சோகம்

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சொந்த ஊருக்கு அவரின் உடல் கொண்டுசெல்லப்பட்டது. எஸ்.பி பிரவேஷ்குமார், குடியாத்தம் டி.எஸ்.பி சரவணன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காவல்துறை மரியாதையுடன் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காவலர் ராஜீவ் காந்தி
காவலர் ராஜீவ் காந்தி

துக்கம் தாளாமல் உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். திருமணத்துக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், காவலர் ராஜீவ் காந்தி உயிரிழந்த சம்பவம், காவல்துறை மற்றும் உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.