Published:Updated:

தாமதமான 108... விபத்தில் சிக்கியவருக்காக தனியார் ஆம்புலன்ஸுடன் டிரைவராக வந்த போலீஸ்!

தனிப்பிரிவு போலீஸ் கணேஷ்
தனிப்பிரிவு போலீஸ் கணேஷ்

கால் நசுங்கி அவர் வேதனைப்பட்டதைப் பார்க்கையில் எனக்கே கஷ்டமாகிடுச்சி. அவரை ஆஸ்பத்திரியில சேர்த்ததுக்குப் பின்னாடி கூட, நான் போலீஸ்னு அவங்களுக்குத் தெரியாது.

காக்கி உடை அணிந்தாலே கணிவும், கருணையும், பரிவும் இருக்காது என்று போலீஸார் மீது நம் மக்களுக்குப் பொத்தம் பொதுவான ஓர் எண்ணம் இருக்கிறது. அதை உடைத்தெறியும் வகையில் அவ்வப்போது ஒருசில போலீஸாரின் செயல்பாடுகளிலும் மனிதம் துளிர்க்கும். அந்தவகையில், விபத்தில் சிக்கியவருக்கு உதவிய திருப்பூர் மாவட்டம் மூலனூர் தனிப்பிரிவு போலீஸ் கணேஷின் செயல்பாடு பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

விபத்திற்குள்ளான ஆம்னி வேன்
விபத்திற்குள்ளான ஆம்னி வேன்

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த புளியவலசு பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (54). இவர் மனைவி சாந்தி (50) மற்றும் மகள் பிரியதர்ஷினியுடன் (14) பொள்ளாச்சி அருகிலுள்ள மாசாணியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியிருக்கிறார். திருப்பூர் மாவட்டம், மூலனூரை அடுத்த புளியம்பட்டி பிரிவு அருகே சென்றுகொண்டிருந்த போது, இவர்களுடைய மாருதி ஆம்னி மீது எதிரே வந்த கார் ஒன்று அதிபயங்கரமாக மோதியிருக்கிறது.

இதில் காரை ஓட்டிய தியாகராஜனுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. வேனின் இடிபாடுகளுக்கு இடையே கால் எடுக்க முடியாத அளவிற்குச் சிக்கியிருக்கிறது. பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸிற்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். தாராபுரம் வரை சென்றதால் ஆம்புலன்ஸ் வரத் தாமதமாகும் என 108 தரப்பிலிருந்து பதில் வந்திருக்கிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்குத் தனியார் ஆம்புலன்ஸை ஓட்டிவந்த தனிப்பிரிவு போலீஸார் கணேஷ், விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட 24 கி.மீ ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்று குறித்த நேரத்தில் விபத்தில் சிக்கியவருக்குச் சிகிச்சை கொடுத்திருக்கிறார்.

தனிப்பிரிவு போலீஸ் கணேஷ்
தனிப்பிரிவு போலீஸ் கணேஷ்

இதுகுறித்து தனிப்பிரிவு போலீஸ் கணேஷ் அவர்களிடம் பேசினோம். `ஆம்னி வேன் ஆக்ஸிடென்ட் ஆச்சு. டிரைவரோட கால் வெளிய எடுக்க முடியாத அளவுக்குச் சிக்கியிருக்கு. ஆம்புலன்ஸ் தாராபுரம் வரை போயிருக்கதால வர லேட்டாகும்னு சொல்றாங்க’ன்னு சம்பவ இடத்துல இருந்து எனக்கு போன் வந்துச்சு. விசாரிச்சப்ப பக்கத்துல வேற எந்த ஆம்புலன்ஸும் கிடைக்கலை. அதிபர்னு ஒருத்தர் மூலனூரில் தனியார் ஆம்புலன்ஸ்களை டிரைவர் வச்சி ஓட்டிக்கிட்டு இருக்கார். அவரைப் போய் பார்த்தா ‘ஆம்புலன்ஸ் இருக்கு, டிரைவர் இல்லைன்னு’ சொன்னாரு. ‘சரி சாவியைக் கொடுங்க’ன்னு நானே ஆம்புலன்ஸை எடுத்துட்டுப் போய், அடிபட்டவரை கொண்டுபோய் ஆஸ்பத்திரியில சேர்த்துட்டேன்” என்றார்.

தொடர்ந்தவர், ``நான் ஏற்கெனவே டி.ஐ.ஜி, ஐ.ஜிக்கு கார் டிரைவராக இருந்துருக்கேன். ஏன் நம்மளே வண்டியை எடுத்தா என்னன்னு ஆம்புலன்ஸை எடுத்துட்டுக் கிளம்பிட்டேன். அடிபட்டவரை நான் ஆஸ்பத்திரியில இறக்கிவிட்ட பின்னாடியும், அவங்க குடும்பத்துக்கு நான் போலீஸ்ங்கிறது தெரியாது.

`பிட் காயின் மோசடி டு ஹெல்மெட் விழிப்புணர்வு'- மீம்ஸ் போட்டு அப்ளாஷ் அள்ளும் ஈரோடு காவல்துறை!

விபத்துக்குள்ளான அந்த ஆம்னியை வச்சிதான் அவங்க பிழைப்பே இருந்துருக்கு. பாவம் இனிமேல் அவர் குடும்பம் என்ன சிரமப்படப் போகுதோ!... கால் நசுங்கி அவர் வேதனைப்பட்டதைப் பார்க்கையில் எனக்கே கஷ்டமாகிடுச்சு” என்றார்.

சல்யூட் கணேஷ் சார்...!

அடுத்த கட்டுரைக்கு