Published:Updated:

``உங்களுக்கு த்ரில், எங்களுக்கு திகில்...'' - நந்தனம் விபத்து குறித்து பெற்றோரும் உளவியல் நிபுணரும்!

நந்தனம் விபத்து
நந்தனம் விபத்து

இளவயதினர் டூ வீலரில் செல்லும்போது, அவர்கள் வயதுக்கே உரிய 'ஆக்ஸிலேட்டரை முறுக்கு முறுக்கு என முறுக்குவது', 'இன்னும் வேகமா போ' என்பன போன்ற உற்சாகக் கோளாறுகளினாலும் விபத்தை விலைகொடுத்து வாங்கி விடுகிறார்கள்.

நேற்று, வழக்கமான செய்திகளிடையே திடீரென அந்த விபத்துச் செய்தியும் வீடியோவுடன் உள் நுழைந்தது. நந்தனம் அருகே இளைஞர் ஒருவர் பைக் ஓட்டிவர, அவர் பின்னால் இரண்டு இளம்பெண்கள் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். மாநகரப் பேருந்தின் இடதுபக்கமாக வந்துகொண்டிருந்த அந்த பைக், திடீரென பேருந்தை முந்தப் பார்க்கிறது. அதாவது, அந்த பைக்கை ஓட்டிவந்த வாலிபர் பேருந்தை அதன் இடதுபக்கமாக இருந்து ஓவர் டேக் செய்கிறார்.

சாலை விபத்து
சாலை விபத்து

கண்ணிமைக்கும் நொடியில், மூன்று பேரையும் சுமந்துவந்த அந்த பைக், சறுக்கி பேருந்துக்கு முன்னால் விழுகிறது. இதைக் கொஞ்சமும் எதிர்பாராத பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்துவதற்குள், எல்லாம் முடிந்துவிடுகிறது. பைக்கின் பின்னால் இருந்த இரண்டு இளம்பெண்களின் மீதும் பேருந்து ஏறி இறங்கி விடுகிறது. சம்பவ இடத்திலேயே அந்த இளம்பெண்கள் உடல் நசுங்கி இறந்துவிடுகிறார்கள். பைக்கை ஓட்டி வந்த வாலிபர் படுகாயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிற இந்த விபத்து வீடியோவைப் பார்க்கும்போதே மனம் பதறி விடுகிறது. இறந்துபோன இரண்டு பெண்களுமே ஜஸ்ட் இருபதுகளின் ஆரம்பத்தில்தான் இருக்கிறார்கள். வாழ்க்கையில் அவர்களுக்கு எத்தனை எத்தனை கனவுகள் இருந்தனவோ... அவர்களின் வளர்ச்சியை நம்பி ஒரு குடும்பம் இருந்திருக்கலாம்; அல்லது தங்கள் குடும்பத்தின் ஒற்றைப் பிள்ளைகளாக அவர்கள் இருந்திருக்கலாம்; அவர்கள் மேல் உயிரையே வைத்திருக்கிற ஒரு காதல் இருந்திருக்கலாம். எல்லாவற்றின் மீதும் அந்தப் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கி விட்டது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை. அந்த இரண்டு இளம்பெண்களைப் பொறுத்தவரை எல்லாமே முடிந்துவிட்டது. சிகிச்சை பெற்று வரும் அந்த இளைஞர் நல்லபடியாக உடல்தேறி வருவதற்குப் பிரார்த்தனை செய்துகொள்வோம்.

விபத்து நடந்தபோது
விபத்து நடந்தபோது

இந்த விபத்தைப் பொறுத்தவரை, 'பைக்குல டிரிபிள்ஸ் போனது தப்பு'; 'பஸ்ஸை போயி லெஃப்ட்ல ஓவர் டேக் செய்யலாமா'; 'அந்தப் பையன் மட்டும் ஹெல்மெட் போட்டிருந்தான். அந்தப் பொண்ணுங்க ஹெல்மெட் போடலை' - இப்படி நிறைய கருத்துகளை சமூகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. 'ஆமா, இப்படியொரு விபத்து நடந்தா, நாலு பேரு நாலுவிதமா கருத்துச் சொல்லத்தானே செய்வாங்க' என்று எடுத்துக்கொள்ளாமல், அந்த வார்த்தைகளில் இருக்கிற 'அய்யோ.. வாழ வேண்டிய பொண்ணுங்க இறந்துபோச்சே' என்கிற பரிதவிப்பைத்தான் நாமெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம்தாண்டி, ஆணும் பெண்ணுமாக இளவயதினர் டூ வீலரில் செல்லும்போது, அவர்கள் வயதுக்கே உரிய 'ஆக்ஸிலேட்டரை முறுக்கு முறுக்கு என முறுக்குவது', 'இன்னும் வேகமா போ' என்பன போன்ற உற்சாகக் கோளாறுகளினாலும் விபத்தை விலைகொடுத்து வாங்கி விடுகிறார்கள். இளம் வயதினரின் இந்த மனநிலையைப் பற்றி, இந்த நேரத்தில் எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை நமக்கிருப்பதால், உளவியல் நிபுணர் ஃபாத்திமாவிடம் இதுகுறித்துப் பேசினோம். கூடவே இரண்டு பெற்றோர்களிடமும்.

சங்கரி, குடும்பத்தலைவி
சங்கரி, குடும்பத்தலைவி

''பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா எங்களுக்கு ஓடி வரக்கூடத் தெம்பிருக்காதே...'' - சங்கரி குடும்பத்தலைவி.

''எங்க தலைமுறையில, ஒரு சினிமா தியேட்டருக்குப் போறோம்; மாலுக்குப் போறாம்னா பெத்தவங்ககிட்டே பர்மிஷன் வாங்கிட்டுத்தான் போவோம். இப்ப வெறும் இன்ஃபர்மேஷன்தான். சில பிள்ளைங்க அதையும் செய்றது கிடையாது. பிள்ளைங்க எங்க போறாங்க, பஸ்ல போறாங்களா; கார்ல போறாங்களா, இல்ல டூ வீலர்ல போறாங்களான்னு எதுவுமே இந்தக் கால பெற்றோர்களுக்குத் தெரியாது. டூ வீலர்ல தோழனோட போறது தப்பில்ல. ஆனா, இப்படி மூணு பேரா போறதும், பஸ்ஸை ஓவர் டேக் பண்றதும் கண்டிப்பா தப்புதான்.

வீட்ல நாங்க, பிள்ளைங்க இதோ இப்ப வந்துடுவாங்க; அரை மணி நேரம் கழிச்சு வந்துடுவாங்கன்னு காத்துக்கிட்டிருப்போம். இந்தக் காலத்துப் பிள்ளைங்க கொஞ்சம் எங்க நிலைமையையும் யோசிச்சுப் பார்க்கணும். உங்களுக்கு எங்கியோ ஒரு இடத்துல ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சுன்னு போன் வந்துச்சுன்னா, ஆபீஸ்ல வேலைபார்த்துக்கிட்டிருக்க அம்மாவும் அப்பாவும் என்ன பண்ணுவாங்க ?

"இந்த வயசுல கேர்ள்ஸ் முன்னாடி தன்னை சுப்பீரியராக காட்டிக்கணும்னு பாய்ஸ் விரும்புறதும் சகஜம்தான். எதுவாக இருந்தாலும் உங்க ஹீரோயிசத்தைக் காட்டுவதற்கான இடம் மெயின் ரோடு கிடையாது.''
உளவியல் ஆலோசகர் ஃபாத்திமா

உங்களுக்கு தப்பா ஒண்ணு நடந்திடுச்சுன்னா, அந்த ஸ்பாட்டுக்கு எங்களுக்கு ஓடிவரக்கூட தெம்பிருக்காதே. நம்மளை நம்பி பெத்தவங்க வெளியே அனுப்பறாங்கன்னா, இப்படி ட்ரிபிள்ஸ் போகாம, பஸ்ஸை ஓவர் டேக் பண்ணாம பத்திரமா வீடு வந்து சேர்றது பிள்ளைங்க பொறுப்புதானே... எங்களால 24 மணி நேரமும் உங்க பாதுகாப்புக்குப் பின்னாடியே வர முடியாதில்லையா ?

''உங்களுக்கு த்ரில், எங்களுக்கு திகில்...'' - வினையாம்பிகை, குடும்பத்தலைவி

''இவங்க கை, காலை உடைச்சிக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல படுத்திட்டா, உடம்பு வலி மட்டும்தான் பிரச்னை. பெத்தவங்களுக்கு மனசு கஷ்டம், பொருளாதார பிரச்னை, பெருசா ஏதாவது ஊனமாயிட்டா இவங்களோட எதிர்கால பிரச்னை, பொண்ணுன்னா கல்யாணம் பண்றதுல பிரச்னைன்னு பாடுபடப் போறது நாங்கதானே... வேகமா வண்டி ஓட்டற பசங்க நிறைய பேர்கிட்டே இதே வார்த்தையை நான் கோபமாவே சொல்லியிருக்கேன். கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் ஆர்த்தோ டிபார்ட்மென்ட் போய் பாருங்க. நந்தனம் ஆக்ஸிடென்ட்ல இறந்துபோன பிள்ளைங்க வயசுல இருக்கிறவங்கதான் கையையும் காலையையும் உடைச்சுக்கிட்டு படுத்துக்கிட்டிருப்பாங்க. கேட்டா வேகமா போனேன்; வண்டி கன்ட்ரோல் ஆகலை. வழுக்கிடுச்சு; முன்னாடி போன வண்டியை ஓவர்டேக் பண்ணேன் ஆன்ட்டி'னு கூலா சொல்லுவாங்க.

வினையாம்பிகை
வினையாம்பிகை

நானும் நேத்து நியூஸ்ல அந்த வீடியோவைப் பார்த்தேன். அது கவர்ன்மென்ட் பஸ். அது என்ன, ஹை ஸ்பீடுலேயா போகப் போகுது. அந்த டிராஃபிக்லே முப்பது இல்லன்னா நாப்பது கிலோ மீட்டர் வேகத்துல போனாலே ஜாஸ்தி. அதைப் போய் கிராஸ் பண்ணி, முன்னாடி விழுந்து, ரெண்டு உயிர் போயிடுச்சில்ல. என்ன அழுதாலும் அந்தப் பொண்ணுங்க திரும்பி வரமாட்டாங்களே. எல்லாத்துக்கும் மேலே இப்ப வர்ற பைக்ஸ். என்ன வேகமா போறாங்க. சிட்டிக்கு வேகமா வண்டி ஓட்ட தடைப் போடணும். இல்லனா, வேகமா போற வண்டிகளை பேரன்ட்ஸ் பிள்ளைங்களுக்கு வாங்கித் தரக்கூடாது.''

''உங்கள் ஹீரோயிசத்தைக் காட்டுவதற்கான இடம் அதுவல்ல...'' - உளவியல் ஆலோசகர் ஃபாத்திமா

"நானும் செய்தியைப் படிச்சேன். ஒண்ணு, அந்தப் பையனுக்கு, ரெண்டு பொண்ணுங்க முன்னாடி தன்னை ஹீரோவா காட்டிக்கணும்கிற விருப்பம் இருந்திருக்கலாம். இல்லனா, மூணு பேர்ல ஒருத்தருக்கோ அல்லது மூணு பேருக்குமோ, எங்கேயாவது அவசரமா போக வேண்டிய தேவை இருந்திருக்கலாம். பொதுவாக, இந்த வயசுல பொண்ணுங்க முன்னாடி தன்னை சுப்பீரியராக காட்டிக்கணும்னு பசங்க விரும்புறதும் சகஜம்தான். எதுவாக இருந்தாலும் உங்க ஹீரோயிசத்தைக் காட்டுவதற்கான இடம் மெயின் ரோடு கிடையாது. இளைஞர்கள் ஜாலியா பைக் டிரைவ் பண்றதை யாரும் குறை சொல்லலை. ஆனா, அதை கவனமா செய்யணும் இல்லையா?

உளவியல் ஆலோசகர் ஃபாத்திமா
உளவியல் ஆலோசகர் ஃபாத்திமா

இறந்த அந்தப் பொண்ணுங்களைப் பொறுத்தவரை, அவங்க அந்தப் பையனை வேகமா வண்டியை ஓட்டுன்னு தூண்டினா மாதிரி தெரியலை. ஆனா, இப்படி டூ வீலர் பின்னாடி உட்கார்ந்திருக்கிற பொண்ணுங்க வண்டி ஓட்டுற பசங்களை 'ஸ்பீடா போ ஸ்பீடா ஓட்டு'ன்னு தூண்டுற சம்பவங்களும் நடக்குது. இதுவும் இந்த வயசுல இயல்பான விஷயம்தான். ஆனா, எந்த இடத்துல இப்படி வேகமா வண்டி ஓட்டுறோம் அப்படிங்கிற கவனம் இருக்கணும். இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை, வண்டி ஓட்டின அந்தப் பையனும், இப்படி போனா விபத்து நடக்கும், தன் உடன் வர்றவங்களுக்கு ஆபத்து நேரும்ங்கிறதை எதிர்பார்த்திருக்க மாட்டான். ஆனால், இந்த விபத்துக்குப் பிறகாவது, வேகமா வண்டி ஓட்டுற இளைய தலைமுறை கொஞ்சம் நிதானமாகணும். பின்னாடி இருக்கையில உங்க பெண் தோழியே இருந்தாலும் ஹீரோவாக முயல வேண்டாம்.''

அடுத்த கட்டுரைக்கு