Published:Updated:

`நடுக்கடலில் மூழ்கிய படகு; வரமறுத்த அதிகாரிகள்!' - புதுவை மீனவர்களின் திக் திக் நிமிடங்கள்

நடுக்கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகில் இருந்து மீனவர்களை சக மீனவர்களே மீட்ட சம்பவம் புதுச்சேரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மூழ்கிய படகு
மூழ்கிய படகு

புதுச்சேரி, வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். நேற்று இரவு இவருக்குச் சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி விசைப்படகில் 8 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அதிகாலை 4 மணிக்குத்தான் மீன்பிடிக்கும் பணியைத் தொடங்குவார்கள் என்றாலும், அந்த நேரத்தில் கடலின் நீர்மட்டம் குறைவாக இருக்கும் என்பதால் முதல்நாள் இரவு 9 மணிக்கே கடலுக்குள் சென்று நங்கூரமிட்டு படகை நிறுத்துவது இவர்களின் வழக்கம். அப்படித்தான் நேற்றும் வீராம்பட்டினத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், அசோக், சாமிநாதன், பிரசாந்த், பாஸ்கர், முத்துக்குமரன், முனியாண்டி, கந்தவேல் ஆகியோர் கடலுக்குள் சென்றனர்.

கடலுக்குள் மூழ்கும் மீன்பிடி படகு
கடலுக்குள் மூழ்கும் மீன்பிடி படகு

காலாப்பேட்டையை ஒட்டிய சின்ன முதலியார் சாவடி என்ற பகுதியில் படகை நிறுத்திவிட்டு உறங்கிய மீனவர்கள், அதிகாலை 4 மணிக்கு வலைகளை வீசத் தயாரானபோதுதான் அங்கிருந்த ஆபத்தை உணர்ந்தார்கள். படகின் எஞ்சின் பகுதியில் ஓட்டை ஏற்பட்டு கடல்நீர் உள்ளே வேகமாகப் புகுந்துகொண்டிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாகப் படகு கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கிராமத்தில் இருந்த மற்ற மீனவர்களை செல்போனில் தொடர்புகொண்டு தகவல் அளித்தனர். விபரீதத்தை உணர்ந்த கிராமத்து மக்கள் உடனே இந்தியக் கடலோர காவல்படையை அணுகி உதவி கேட்டனர். ஆனால், மீட்புப் படகு பழுதாகி இருப்பதாக அவர்கள் கைவிரித்துவிட்டதால், புதுச்சேரி கடலோர காவல் படையின் உதவியை நாடினார்கள்.

உயிர் பிழைத்த மீனவர்கள்
உயிர் பிழைத்த மீனவர்கள்

ஆனால், `தலைமை அலுவலகத்தில் புகார் அளியுங்கள். அதன்பிறகுதான் எங்களால் வர முடியும்' என்று அவர்கள் தெரிவித்துவிட்டதால் செய்வதறியாது திகைத்த மீனவர்கள், தனியார் மீட்புப்படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்றனர். அதற்குள் ஓட்டையின் வழியே கடல்நீர் வேகமாக உள்ளே புகுந்துகொண்டிருந்ததால் அந்தப் படகு 60 சதவிகிதம் மூழ்கத் தொடங்கியிருந்தது.

அதேபோல மீட்புப் படகு அந்த இடத்துக்கு செல்வதற்குள் தங்களின் சிறிய படகில் கடலுக்குள் சென்ற சின்ன முதலியார் சாவடி மீனவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்கடுத்த சில நிமிடங்களில் அந்த மீன்பிடி விசைப்படகு முழுவதுமாகக் கடலில் மூழ்குவதைப் பார்த்த மீனவர்கள் பதறிப் போனார்கள்.

மீன்பிடி படகு
மீன்பிடி படகு

கரைக்குத் திரும்பி நம்மை தொடர்புகொண்டு தகவலைக் கூறிய அந்த மீனவர்கள், ”அந்தப் படகோடு நாங்களும் மூழ்கியிருப்போம். கடல் அன்னைதான் எங்களை உயிரோடு காப்பாற்றியிருக்கிறார்” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.