Published:Updated:

`2-வது மாடி; செல்போனில் கவனம்!' -புதுவையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது 2-வது மாடியிலிருந்து இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செல்போன்
செல்போன் ( மாதிரி படம் )

புதுச்சேரி, ஜீவானந்தபுரம் பாலாஜி வீதியில் வசிக்கும் திருமலை என்பவரின் மகள் செல்வி. 22 வயதான இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. தற்போது இவர்களுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

செல்போன்
செல்போன்
மாதிரி படம்

சரவணன் திருப்பூரில் பணியாற்றி வந்த நிலையில் பிரசவத்துக்காக புதுச்சேரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த செல்வி, பிரசவத்துக்குப்பின் இங்கேயே தங்கியிருந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் மீது அதீத பாசம் வைத்திருந்த சரவணன், அவ்வப்போது புதுச்சேரிக்கு வந்து மனைவி மற்றும் குழந்தையைப் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு வீட்டின் 2-வது மாடிக்குச் சென்ற செல்வி, தனது கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். குழந்தை பேசுவது, தவழ்வது, சாப்பிடுவது, விளையாடுவது என அனைத்தையும் கணவரிடம் சந்தோஷமாகக் கூறி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு சுவாரஸ்யத்தில் தான் எங்கு நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து, உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருந்த கைப்பிடிச் சுவரில் தடுக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

செல்போன்
செல்போன்
மாதிரி படம்

2-வது மாடியிலிருந்து கீழே விழுந்த செல்வியின் தலையில் பலமான காயம் ஏற்பட்டுவிட்டது. படுகாயங்களுடன் மயக்க நிலையில் இருந்த அவரை மீட்ட பெற்றோர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்தார் செல்வி.

இந்தச் சம்பவம் தொடர்பாக செல்வியின் தந்தை திருமலை அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 வருடத்துக்குள் உயிரிழந்திருப்பதால், வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.