Published:Updated:

ஆசிரியர் பைக்கில் சாப்பிடச் சென்ற புதுக்கோட்டை மாணவருக்கு நேர்ந்த துயரம்!

மணிமாறன்.இரா

புதுக்கோட்டையில், டூவீலரில் சென்ற பள்ளி மாணவன், லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரி மோதி மாணவர் பலி
லாரி மோதி மாணவர் பலி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரின் மகன் திலக் (14). இவர் புதுக்கோட்டை அருகே வடகாட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையானது பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதில், திலக் கலந்துகொண்டார்.

லாரி மோதி மாணவர் பலி
லாரி மோதி மாணவர் பலி

ஒத்திகை நிகழ்ச்சி முடிந்தவுடன், திலக், தன்னுடைய நண்பரான அப்துல் சபீக்கைக் கூட்டிக்கொண்டு, டூவிலரில் வடகாட்டில் உள்ள கடைவீதிக்குச் சென்று சாப்பாடு வாங்கிக்கொண்டு பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மோதியதில், திலக் மற்றும் அப்துல் சபீக் தூக்கி வீசப்பட்டனர். இதில், திலக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். காயமடைந்த அப்துல் சபீக் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி ஆசிரியர் ஒருவரின் டூவீலரை எடுத்துக்கொண்டு, பள்ளி ஆசிரியர்களுக்கு மதிய உணவு வாங்கி வருவதற்காகவே, திலக்கும் அப்துல் சபீக்கும் கடைவீதிக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

லாரி மோதி மாணவர் பலி
லாரி மோதி மாணவர் பலி

சாப்பாடு வாங்கிக்கொண்டு வரும் வழியில்தான் லாரி மோதி திலக் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். பட்டுக்கோட்டை அருகே கருப்பூரைச் சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவரை போலீஸார் கைது செய்து மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி வடகாடு போலீஸார் கூறும்போது,``சாப்பிட்டு வருவதாகக் கூறித் தான் மாணவர்கள், ஆசிரியரிடம் டூவிலரை வாங்கிச் சென்றிருக்கின்றனர். எதிர்பாராதவிதமாக லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.