புதுக்கோட்டை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நக்கீரர் வயலைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரர். கல்லூரியில் படித்துவருகிறார். இவர், தன் நண்பர்கள் சிலருடன் திருக்கோகர்ணம் பகுதியில் இருக்கும் ராஜா பாறை குளக்கரைக்குச் சென்றிருக்கிறார். அங்கு நண்பர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது, பிரகதீஸ்வரரின் நண்பர்களில் ஒருவர் அந்தக் குளத்தில் குதித்து சாகசம் செய்து அதை வீடியோ பதிவு செய்திருக்கிறார். இப்படி எடுக்கும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நண்பன் செய்வதைப் பார்த்த பிரகதீஸ்வரர், தானும் அது போன்று குளத்தில் குதிப்பதாகவும், அதை வீடியோ எடுக்கும்படியும் கூறி செல்போனை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு குதித்திருக்கிறார். அப்போது, அங்கிருந்த பாறையின் இடுக்கில் சிக்கியவர், நீந்திக் கரை ஏற முடியாமல் நீரில் மூழ்கிவிட்டார். இதையடுத்து, சக நண்பர்கள் சில மணி நேரம் தேடிப் பார்த்திருக்கின்றனர். கிடைக்காத பட்சத்தில், உடனே திருக்கோகர்ணம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொடர்ந்து, தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் தொடர் தேடுதலில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கல் பாறையின் நடுவில் இளைஞரின் உடல் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிகுந்த சிரமத்துக்கிடையே தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே, பிரகதீஸ்வரரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் உறவினர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்த திருக்கோகர்ணம் போலீஸார், பிரகதீஸ்வரரின் நண்பர்களிடமும் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். சாகசம் செய்து வீடியோ பதிவு செய்தவதற்காக, குளத்தில் குதித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.