Published:Updated:

புதுக்கோட்டை: வெளிச்சத்துக்காக ஏற்றிய மெழுகுவத்தி; தீக்கிரையான குடிசை! - தவிக்கும் தாய், மகன்

`வெளிச்சம் இல்லையேன்னு குடிசையில் ஏத்திவெச்ச மெழுகுவத்தி... வந்து பார்தப்போ, குடிசை இருந்த இடமே தெரியாம போயிருச்சு. நல்லவேளையா முரளி வீட்டுக்குள்ள இல்லை.’

புதுக்கோட்டை அருகே மரக்கடை வீதியிலிருந்தது புவனேஸ்வரியின் குடிசை வீடு. மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மகனுடன் மெழுகுவத்தி வெளிச்சத்தில் குடும்பத்தை ஓட்டிவந்த புவனேஸ்வரிக்கு, தற்போது அந்தக் குடிசை வீடும் இல்லை. வெளிச்சத்துக்காக வீட்டுக்குள் மெழுகுவத்தி ஏற்றிவைக்க, எதிர்பாராதவிதமாக அந்த மெழுகுவத்தி பற்றி எரிந்து வீடே தீக்கிரையாகிவிட்டது. அந்த நேரத்தில் தாயும் மகனும் வீட்டுக்கு வெளியே இருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர்.

புவனேஸ்வரி, முரளி
புவனேஸ்வரி, முரளி

பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்திவந்த புவனேஸ்வரிக்கு, கொரோனா ஊரடங்கு நாள்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிட்டன. அதோடு, வீடும் தீக்கிரையான நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் புவனேஸ்வரி அல்லாடிக்கொண்டிருக்கிறார்.

புவனேஸ்வரியிடம் பேசினோம். ``பொறந்து வளர்ந்ததெல்லாம், மரக்கடை வீதியிலதான். கல்யாணத்துக்குப் பிறகு திருக்கோகர்ணத்தில் வாடகை வீட்டில்தான் இருந்தோம். 20 வருஷத்துக்கும் மேல நல்லா பார்த்துக்கிட்ட என் கணவரு, இப்போ ஒரு வருஷமா என்னைக் கைவிட்டுட்டாரு.

குடியிருந்த வீட்டுக்கு வாடகைகூட கட்ட முடியலை. என்ன செய்யுறதுன்னு தெரியலை. ஒருகட்டத்துல வேற வழியில்லாம வாடகை வீட்டைக் காலி பண்ணிட்டு பொறந்த வீட்டுக்கு வந்துட்டேன். அப்பா, அம்மா இப்போ இல்லை. கூடப் பொறந்தவங்க ஒரு அக்கா, ரெண்டு அண்ணனுங்க. முரளி எனக்கு ஒரே பையன். முரளிக்கு முன்னாடி ரெண்டு, மூணு பிள்ளைங்க பொறந்து இறந்துபோச்சு. முரளிக்கு இப்போ 25 வயசு. ஆனா, சின்னப் பையனாட்டம் இருப்பான். புகுந்த வீட்டை விட்டுட்டு இத்தனை வருஷம் கழிச்சு ஒண்ணுமே இல்லாம வந்து நிக்கிறேங்கற கவலை இருந்துச்சு.

முரளி
முரளி

எத்தனை கவலைகள் வந்தாலும், முரளியோட முகத்துலருந்து வர்ற சிரிப்பைப் பார்த்தாலே அத்தனை கவலையும் மறந்து போயிடும். அவனுக்காகத்தான் என் உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். பெருசா அண்ணனுங்க உதவாட்டியும், இப்போதைக்குக் குடியிருக்கிறதுக்கு இடத்தைக் கொடுத்தாங்க. குடிசை வீடுவெக்கிறதுக்குக் கொஞ்சம் உதவியும் செஞ்சாங்க. நானும் வீட்டு வேலை செஞ்சு, அதுல கிடைச்ச வருமானத்தைவெச்சு, குடிசையைக் கட்டி, குடியிருந்துக்கிட்டு இருந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெருப்புக்கு இரையாகிய குடிசை.. தவித்த குடும்பம்.. ஊரடங்கு நேரத்திலும் சொன்னதை செய்த டாக்டர்!

ஆனா, யாருக்கு பாவம் செஞ்சேனோ தெரியலை. எங்களோட குடிசை எரிஞ்சு சாம்பாலாப் போச்சு. வெளிச்சம் இல்லையேன்னு மெழுகுவத்தியை ஏத்திவெச்சிட்டு வேலைக்குப் போயிட்டேன். என்ன ஆச்சுன்னே தெரியலை... வந்து பார்த்தப்போ, வீடே எரிஞ்சுபோய்க் கிடந்துச்சு.பிளாஸ்டிக் கவர் உருகி, தீப்பத்திக்கிருச்சு. கெட்டதுலயும் ஒரு நல்லதா முரளி வீட்டுக்குள்ள இல்லாம வெளியே வந்துட்டான். வீடு எரிஞ்சு போச்சேங்கிற கவலை ஒருபக்கம் இருந்தாலும், பிள்ளைக்கு ஒண்ணும் ஆகலையேன்னு நிம்மதியா இருக்கு. அண்ணன் வீட்டுலயும் கொஞ்சம் உதவி பண்றாங்க.

புவனேஸ்வரி, முரளி
புவனேஸ்வரி, முரளி

இருந்த எல்லாப் பொருளும் தீப்பத்தி எரிஞ்சுபோச்சு. சாப்பாடு சமைச்சு சாப்பிடக்கூட எந்தப் பொருளும் இல்லை. நான் வீட்டு வேலை பார்க்கிறவங்க வீட்டுல இப்போதைக்கு ரெண்டு பேரும் தங்கிக்கிறோம். ஊரடங்கால, தொடர்ச்சியா வீட்டு வேலையும் இல்லை. என்ன செய்யிறதுன்னே தெரியலை. என்னோட நிலைமை தெரிஞ்ச சிலர் வீடு கட்டித் தர்றதாகச் சொல்லியிருக்காங்க. எனக்கு அப்புறம் முரளியைச் சொந்தக்காரங்க நல்லா பார்த்துக்குவாங்களான்னு தெரியலை. ஆனா, என் உசுரு இருக்கற வரைக்கும் முரளியை நல்லா பார்த்துக்கணும். அதுதான் என்னோட ஆசை" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு