Published:Updated:

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்தது எப்படி? - ஹைதராபாத் ரயில் விபத்தின் பின்னணி

ஹைதராபாத், கச்சிக்குடா ரயில் நிலையத்தில் நேருக்கு நேர் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிக்னல் பிரச்னையே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

ரயில் விபத்து
ரயில் விபத்து

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று காலை 10.30 மணியளவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிரவைத்தன. அதில் எக்ஸ்பிரஸ் ரயில் எதிரில் வர, அதே தண்டவாளத்தில் புறநகர் ரயில் ஒன்றும் வருகிறது. இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், புறநகர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தூக்கி வீசப்படுகிறது.

ரயில் விபத்து
ரயில் விபத்து

பின்னர் புற நகர் ரயிலிலிருந்த பயணிகள் கீழே இறங்கி ஓடுகின்றனர். பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புறநகர் ரயிலின் ஆறு பெட்டிகளும் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகளும் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த விபத்துக்கு முற்றிலும் மனித தவறே காரணம் எனக் கூறப்படுகிறது.

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள்!

செகந்திராபாத்திலிருந்து கர்ணூல் சென்றுகொண்டிருந்த ஹன்ட்ரி எக்ஸ்பிரஸுக்கு, கச்சிக்குடா ரயில் நிலையத்தில் 2-ம் பிளாட்பாரத்தைக் கொடுத்துவிட்டு, கச்சிக்குடாவிலிருந்து புறப்பட்ட பிறகு 4-வது ட்ராக்கில் மாற்றி விட வேண்டும். எக்ஸ்பிரஸ் 4-வது ட்ராக்குக்குச் சென்ற பிறகு, லிங்கம்பள்ளி - ஃபாலாக்ணுமா புறநகர் ரயிலுக்கு கச்சிக்குடாவில் 2-வது பிளாட்பாரம் வழங்க வேண்டும் என்பதுதான், ரயில் சிக்னல் பிளானாக இருந்தது.

பிளான்படி நேற்று காலை சரியாக 10.30 மணிக்கு கச்சிக்குடா 2-வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது ஹண்டரி எக்ஸ்பிரஸ். அனைத்துப் பயணிகளும் இறங்கிய பிறகு, ரயில் மெதுவாகப் புறப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் நான்காவது ட்ராக்குக்கு செல்வதற்கு முன்பே, எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது என்ற எண்ணத்தில், புறநகர் ரயிலுக்கும் 2-வது பிளாட்பாரம் வழங்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் சமையல்; ரயிலில் பற்றி எரிந்த தீ! - பாகிஸ்தானை உலுக்கிய 65 பேரின் மரணம்

அதே ட்ராக்கில் புறநகர் ரயில் வந்ததால் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. கச்சிகுடா ரயில் நிலையத்துக்கு மிகவும் அருகில் இந்த விபத்து நடந்ததால் இரு ரயில்களின் வேகமும் மெதுவாகவே இருந்துள்ளது. இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. சரியாகக் கண்காணித்து சிக்னல் தராத மனிதர்களின் தவறே இந்த விபத்து எனக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

ரயில் விபத்து
ரயில் விபத்து

இன்ஜின்களுக்கு இடையில் சிக்கிய ஓட்டுநர்!

கச்சிக்குடா ரயில் நிலைய விபத்தில், புறநகர் ரயிலை இயக்கிய லோகோ பைலட் சந்திரசேகருக்குதான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரு ரயில்களும் மோதிய வேகத்தில், இரண்டு இன்ஜின்களுக்கு இடையில் சந்திரசேகர் சிக்கிக்கொண்டுள்ளார். கேஸ் கட்டர்கள் உதவியுடன் சுமார் 8 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு லோகோ பைலட் வெளியில் எடுக்கப்பட்டுள்ளார். பைலட் மயங்கிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் சிக்கியிருக்கும்போதே அவருக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.