Election bannerElection banner
Published:Updated:

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: `அதிக உற்பத்தி நெருக்கடி காரணமா?’ - கலங்கும் தொழிலாளர்கள்

சாத்தூர் பட்டாசு ஆலை
சாத்தூர் பட்டாசு ஆலை

ஃபேன்ஸி ரக பட்டாசு தயாரிக்குற மருந்து கலப்புகளில் அரசால் தடைசெய்யப்பட்ட சில மருந்துகளும் கலக்கப்படுது. வீரியம்மிக்க இந்த மருந்துகளை தொழிலாளர்களுக்கு சரியா கையாளத் தெரியாததுனாலயும் இந்த மாதிரி விபத்துகள் நடக்குது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான `ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை' இயங்கிவருகிறது. ஃபேன்ஸி ரக தயாரிப்புக்கான நாக்பூர் உரிமம் பெற்று இயங்கிய இந்த ஆலை நான்கு பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. 20 அறைகளில் 89 பேர் வேலை பார்த்துவந்திருக்கிறார்கள். ஃபேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்து பரவிய தீயால் 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலை
ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலை

இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்திருக்கிறது. படுகாயமடைந்த 29 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில், 14 பேர் 60 சதவிகித தீக்காயத்துடனும் நான்கு பேர் 90 சதவிகித தீக்காயத்துடனும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்த 18 பேரில் எட்டுப் பேரின் உடல்களே அடையாளம் காணப்பட்டுள்ளன. சிலரது உடல்கள் உருக்குலைந்திருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

பட்டாசு விபத்து குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளர்களிடம் பேசினோம். ``விருதுநகர் மாவட்டத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள், சென்னை உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் என மூணு வகையில பட்டாசு ஆலைகள் இயங்கிக்கிட்டு இருக்கு. விபத்து நடந்த மாரியம்மாள் ஃபயர் ஒர்க்ஸ் கம்பெனி, ஃபேன்ஸி ரக பட்டாசு தயாரிக்கிற லைசன்ஸ் வாங்கி நடத்தப்படுது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்
விபத்தில் பாதிக்கப்பட்டவர்

கம்பெனி லைசென்ஸ் சந்தனமாரிங்கிறவர் பேர்ல இருக்கு. ஆனா, கம்பெனிய நாலு பேரு லீஸுக்கு எடுத்து நடத்திட்டுவர்றாங்க. இதுவே முதல் தவறு. லீஸுக்கு எடுத்தவங்களோட நோக்கமே உற்பத்தியை அதிகரிக்கணும்கிறதுதான். ஒரு ஆளு அஞ்சு பேரு வேலையைப் பார்க்கணும். ஒரு ரூமுக்குள்ள ரெண்டு பேர்ல இருந்து நாலு பேரு வரைக்கும்தான் இருந்து வேலை பார்க்கணும். ஆனா, பத்து பேரு வரைக்கும் உட்கார்ந்து வேலை பார்க்கச் சொல்லுவாங்க.

இப்படி இடைவெளியே இல்லாம உட்கார்ந்து வேலை பார்க்கறதுனாலயும், அதிக உற்பத்தி நெருக்கடியும் விபத்துகளுக்குக் காரணமா இருக்கு.

பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலை விபத்து

இதுல சில கம்பெனிகள்ல உற்பத்திக்கு ஏத்த கூலி தருவோம்னு சொல்லுறதுனால கூடுதலா கூலி கிடைக்குமேன்னு வேகமாக பட்டாசுகளை உற்பத்தி செய்வாங்க. அதுலயும் சில முதலாளிகள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வந்து புரொடக்‌ஷன் எண்ணிக்கையைப் பார்த்து குறைஞ்சுட்டா திட்டுவாங்க. இதனாலயே அதிக மன உளைச்சல் ஆகிடும். இந்த ஃபேன்ஸி ரக பட்டாசு தயாரிக்குற மருந்து கலப்புகளில் அரசால் தடைசெய்யப்பட்ட சில மருந்துகளும் கலக்கப்படுது. வீரியம்மிக்க இந்த மருந்துகளை தொழிலாளர்களுக்குச் சரியா கையாளத் தெரியாததுனாலயும் இந்த மாதிரி விபத்துகள் நடக்குது" என்றனர்.

அரசு, இந்த விவகாரத்தில் முறையாக ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி, விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு