Published:Updated:

அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு நீங்களும் காரணமாக இருக்கலாம்?! #VikatanInfographics

சாலை விபத்துகள்
சாலை விபத்துகள் ( #VikatanInfographics )

எதிர்பாராமல் நிகழ்வதுதான் விபத்து. ஆனால், ஒரு தவறும் செய்யாத அப்பாவிகள் விபத்தில் சிக்கிப் பலியாவதுதான் சோகமான ஒன்று.

பயணம் செய்வது சுகமானது; சுவாரஸ்யமானது. ஆனால், அதே பயணம் இப்போதெல்லாம் பயப்படத்தான் வைக்கிறது. காரணம், அதிகரித்துக்கொண்டே வரும் விபத்துகளே. தற்போது சாலை விபத்துகள் எல்லாம் தொடர் நிகழ்வாகவே மாறிவிட்டன. எதிர்பாராமல் நிகழ்வதுதான் விபத்து. ஆனால், எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் விபத்தில் சிக்கிப் பலியாவதுதான் சோகமான ஒன்று. விபத்து தொடர்பான செய்திகளைத் தினந்தோறும் படிக்கின்றோம்.

சாலை விபத்துகள்
சாலை விபத்துகள்

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 4,00,000 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதில் 1,50,000-க்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். 2017-ம் ஆண்டில் 4,64,910 சாலை விபத்துகள் ஏற்பட்டு அதில் 1,47,913 பேர் இறந்துள்ளனர்.

2018-ல் 4,67,044 சாலை விபத்துகள் ஏற்பட்டு அதில் 1,51,417 பேர் இறந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் விபத்தும், உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

சாலை விபத்துக்கள்
சாலை விபத்துக்கள்
#VikatanInfographics

தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துகள் குறைந்திருந்தாலும், விபத்தினால் பல உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனையாகவே இருக்கிறது. அதிலும் சென்னையில், ஒவ்வோர் ஆண்டும் 7,000 விபத்துகளில், ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 2018-ல் 7,580 விபத்துகள் ஏற்பட்டு, 1,260 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துக்கள்
சாலை விபத்துக்கள்

சென்னையில் ஏற்படும் விபத்துகளில் இருசக்கர வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளே அதிகம். 2018-ல் 3,084 விபத்துகள் இருசக்கர வாகனங்களினால் ஏற்பட்டுள்ளன. அதேபோல், எங்கு பார்த்தாலும் மக்கள் தொகை அதிகமாக இருப்பதுபோல், மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என முளைத்து விட்டன. பல இடங்களில் விபத்து ஏற்படுவதற்கு மூன்று சக்கர வாகனங்களே காரணமாக இருக்கின்றன. போக்குவரத்து விதிகளை மீறாமலும், இண்டிகேட்டர் போடாமலும் வளைவான சாலைச் சந்திப்புகளில் செல்வதாலும் விபத்துகள் அதிகம் ஏற்படுவதாகப் பலர் கூறுகின்றனர். முன்னால் செல்லும் வாகனத்தை முந்திக்கொண்டு போக வேண்டும் என்பதே முக்கியக் காரணம். கொஞ்சம் இடைவெளி இருந்தாலும் நுழைந்து விடுகிறார்கள். சவாரிக்காக சாலையின் நடுவிலேயே வாகனத்தைத் திடிரென நிறுத்துவதாலும் பல விபத்துகள் ஏற்படுகின்றன.

ஆட்டோ
ஆட்டோ

அவசரமாகப் போக வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கிறதே தவிர, பாதுகாப்பாகப் போக வேண்டும் எனப் பலரும் நினைப்பதில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் 2018-ல் சென்னையில் மட்டும் 583 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்திய அளவில் 32,306 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்தில் சிக்கி சென்னையில் 33 பேர் வரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஏற்பட்ட விபத்துகளுக்கு அரசு பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதிவேகமாகப் பயணிப்பதால் பெரிய அளவில் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என, அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கவனக்குறைவாகவும், ஆபத்தாகவும் பயணிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சென்னை முழுவதும் அனைத்துச் சாலைகளிலும் சிசிடிவி உள்ளது. அதைத் தொடர்ந்து முறையாகக் கண்காணித்து, போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து, உடனடியாக முறையான தண்டனை கொடுத்தால், விபத்தும் குற்றச் செயல்களும் படிப்படியாகக் குறையும். இல்லையெனில், ஒவ்வொரு விபத்திலும் அதற்கு தொடர்பே இல்லாத அப்பாவிகள் பாதிக்கப்படுவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

890 விபத்துகள், 3,857 பேர் பலி: 2010 முதல் 2019 வரை ஏற்பட்ட விமான விபத்துகள்! #VikatanInfographics

சென்னை நகரின் சாலைகளின் பிரச்னைகள்!

  • வண்டியை ஓட்டுவதற்கு இலகுவாக இல்லாத சாலைகள்

  • ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நடைபாதைகள்

  • திட்டமிடாமல் உருவாக்கப்பட்டிருக்கும் சாலைச் சந்திப்புகள்

  • போதிய வெளிச்சம் இல்லாமை

  • வாகனங்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டிருக்கையில் சாலைகளின் எண்ணிக்கையும், அளவும் குறைவாக இருப்பது

  • மின்சாரம், குழாய்கள் முதலானவற்றைப் பதிப்பதற்காகத் தோண்டப்படும் குழிகள்

ஆகியவை சென்னை சாலைகளில் நீடிக்கும் பிரச்னைகள் எனச் சுட்டிக்காட்டுகிறது `Master Plan 2026' அறிக்கை.

சாலை விபத்துகளைத் தடுக்கவும், சாலை விதிமுறைகளை மீறுவோரைக் கண்டிக்கவும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், பாதுகாப்பற்ற சாலைகளாலும், தவறான ஓட்டுநர்களாலும் தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. சாலை விபத்துகளைத் தடுக்க அரசு எடுக்கும் முடிவுகளுக்குப் பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து வந்தால் விபத்து இல்லாத நாடாக மாற்ற முடியும்.

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் பயணங்களைத் திட்டமிட்டு, சாலை விதிகளைக் கடைப்பிடித்து, சீரான வேகத்தில் சென்றால் மட்டுமே பயணம் சிறப்பாக அமையும்.
அடுத்த கட்டுரைக்கு