Published:Updated:

`40 மீட்டர்தான் சாலை, 80 விபத்துகள்!'- பதறவைக்கும் `இன்டர்லாக்'கற்கள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூக்கல்தொரை சாலை செங்குத்துப் பகுதியில் இன்டர்லாக் கற்கள் பதித்ததன் காரணமாக கடந்த 7 மாதத்தில் 80 வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலை
இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலை ( கே.அருண் )

மலைப் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் மேடு பள்ளங்கள் நிறைந்த மற்றும் கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் உள்ள சாலையாகவே உள்ளன. சாலைகளின் உறுதித் தன்மைக்காக பல இடங்களில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்படுகின்றன.

இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலை
இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலை
கே.அருண்

வளைவுகளிலும் சரிவுப் பகுதிகளிலும் சாலைகளில் இந்தவகை இன்டர்லாக் கற்கள் பொருத்தப்படுவதால் குறிப்பிட்ட இடங்களில் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துவருகின்றனர். ஆனால், பல இடங்களில் தொடர்ந்து இன்டர்லாக் கற்கள் பதிக்கப்படுகின்றன.

இதேபோல கோத்தகிரியிலிருந்து உயிலட்டி அருவி வழியாக கூக்கல்தொரை செல்லும் 10 கி.மீ சாலை கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்தச் சாலையில் மிக செங்குத்தான பகுதியில் 4௦ மீட்டர் நீளத்திற்கு இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டன. தார் சாலையாக இருந்த பகுதியில் கற்கள் பதிப்பதை உள்ளூர் மக்கள் எதிர்த்தனர். ஆனால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி கற்களைப் பதித்தனர்.

விபத்துக்குள்ளான வாகனம்
விபத்துக்குள்ளான வாகனம்

இதனால் இந்தப் பகுதியில் நாள்தோறும் வாகன விபத்துகள் ஏற்படுவதாக இந்தப் பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் கூறுகையில், ``இந்தச் சாலையில் விபத்து ஏற்படாத நாளே இல்லை. கடந்த 7 மாதத்தில் 72 பைக்குகள், 10க்கும் அதிகமான கார்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. மேலும் பள்ளி வாகனங்கள் அரசு பேருந்துகள் மிகுந்த கவனத்துடன் சென்றாலும் நிலை தடுமாறுகின்றன” என்றார்.

கூக்கல்தொரை
கூக்கல்தொரை

கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ரவி கூறுகையில் “இந்தச் சாலையில் வாகனம் ஓட்டுவதற்கு பயமாக உள்ளது. நாம் எவ்வளவு கவனத்துடன் சென்றாலும் விபத்து ஏற்படுகிறது. நேற்று முன்தினம்கூட கார் ஒன்று விபத்துக்குள்ளானது. தடுப்புச் சுவரில் மோதி நின்றிருக்காவிட்டால் 100 பள்ளத்தில் பாய்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். எனவே, இந்தக் கற்களை அகற்றிவிட்டு தார் அல்லது கான்கிரீட் அமைத்துதர வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்தப் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்து உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றனர்.