Published:Updated:

அதிகாலையில் இடிந்து விழுந்த மேற்கூரை! - கோவை ரயில் நிலையத்தில் ஊழியர்களுக்கு நடந்த சோகம்

குருபிரசாத்

கோவை ரயில் நிலையத்தில், பார்சல் அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

விபத்து
விபத்து

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்செட் சாலையில் ரயில்வே பார்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இருசக்கர வாகனங்கள் மற்றும் மற்ற பொருள்கள் அங்கு பார்சல் செய்யப்பட்டு ரயிலில் ஏற்றப்படும். கோவையில் கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

விபத்து
விபத்து

இந்நிலையில், பார்சல் அலுவலகக் கட்டடம் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கிய பவிழமணி, இப்ராஹிம் மற்றும் வடமாநிலத் தொழிலாளி ராஜூ ஆகிய மூன்று பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், இப்ராஹிம் மற்றும் பவிழமணி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்து
விபத்து

இப்ராஹிம் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், பவிழமணி கிளாக் ரூம் உதவியாளராகவும் பணியாற்றி வந்தனர். படுகாயமடைந்த வடமாநிலத் தொழிலாளி ராஜூ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.