விருதுநகர் பவுண்டு தெருவைச் சேர்ந்தவர் அப்பணசுவாமி. இவருக்குச் சொந்தமாகப் பாண்டியன் நகர்-காரியாபட்டி ரோட்டில் எண்ணெய் மில் இயங்கி வருகிறது. இதில் தேங்காய் எண்ணெய், முந்திரி எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் லிட்டர் எண்ணெய் 4 டேங்கர்களில் தனியே விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துவிட்டு நேற்று இரவு 8.30 மணிக்கு ஆலையை மூடிவிட்டு பணியாளர்கள் அனைவரும் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து, இரவு 9 மணியளவில் எண்ணெய் மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. பல அடி உயரத்துக்கு தீ எழும்பியதால் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதுமே கரும்புகையால் சூழப்பட்டது.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், தீ விபத்து குறித்து விருதுநகர் தீயணைப்பு நிலையத்துக்கும், ஆலை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விருதுநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎண்ணெய் மில் என்பதால் நீரை பயன்படுத்தி 'தீ'யை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து, இதற்காக பிரத்யேகமாக சிவகாசியிலிருந்து சோப்பு ஆயில் கலந்த நீர் தெளிக்கக்கூடிய தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. மேலும், அருப்புக்கோட்டை, காரியாபட்டியிலிருந்து தலா ஒரு வாகனமும், விருதுநகர் நிலையத்திலிருந்து 3 வாகனங்களும் என 6 தீயணைப்பு வாகனங்கள் எண்ணெய் மில்லில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். வானளாவிய தீயால் அங்கு பெரும் மக்கள் கூட்டம் கூடியது. மீட்புப் பணியின்போது, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க வேடிக்கை பார்க்கவந்த பொதுமக்கள் கூட்டத்தை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இரவு 9 மணிக்கு தொடங்கிய மீட்புப் பணிகள் நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. தீ முழுமையாக அணைக்கப்பட்டபிறகு மீட்புத்துறையினர் அங்கிருந்து சென்றனர். இந்தத் தீ விபத்தில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருக்கும் எனத் தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.