Published:Updated:

சேலம்: மின்கசிவு; திடீர் தீ! - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை பலிகொண்ட விபத்து

தீ விபத்து
தீ விபத்து

சேலத்தில் நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு பயங்கர தீ பரவியதில், வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.

சேலம் நரசோதிப்பட்டி ராமசாமிநகர் பகுதியைச் சேர்ந்த மரஅறுவைக் கடையின் உரிமையாளர் கார்த்திக். இவரின் மனைவி மகேஸ்வரி. குழந்தைகள் முகேஷ், சர்வேஷ் மற்றும் இவருடைய அண்ணன் அன்பழகன், புஷ்பா இவர்களின் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்தார்கள். இவர்கள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் புதிய வீடு கட்டி குடியேறியிருக்கிறார்கள்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்

நேற்று இரவு தங்களுடைய பணிகளை முடித்துவிட்டு அவரவர்களின் அறைகளில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். இந்தநிலையில், நள்ளிரவில் கார்த்திக்கின் அறையில் கதவு ஓரமாக மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கதவுகள் எரிந்து, வீட்டுக்குள் தீ பரவியது. வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின் உபகரணங்கள் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறின. இதில், கீழ்த்தளத்தில் தூங்கிக்கொண்டிருந்த கார்த்திக் அவரின் மனைவி மகேஸ்வரி, குழந்தைகள் முகேஷ், சர்வேஷ் மற்றும் கார்த்திக்கின் அண்ணனின் மனைவி புஷ்பா ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

கும்பகோணம் தீ விபத்து: `இருந்திருந்தா மரம்போல எங்களைக் காத்திருப்பியே!’ - கதறிய பெற்றோர்

இந்தச் சம்பவம் சேலம் தீயணைப்புத்துறையினருக்குத் தெரிய வர, உடனே விரைந்து வந்து தீயை அணைத்து வீட்டுக்குள் தவித்துக்கொண்டிருந்த கார்த்திக் அண்ணன் அன்பழகன், அவருடைய குழந்தைகள், பெற்றோர் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். இந்தத் தகவல் தெரிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

தீ விபத்து
தீ விபத்து

தொழிலதிபரின் வீட்டில் நள்ளிரவில் தீப்பிடித்தது எப்படி என சேலம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். கதவு ஓரமாக ஏற்பட்ட மின்கசிவால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்றும். ஏ.சி-யில் ஏற்பட்ட மின்கசிவால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு